பல்நோக்கு வாகனம் (MPV) சாலைத் தடுப்பில் மோதி, கவிழ்ந்து தீப்பிடித்தது; ஓட்டுநர் உடல் கருகி மரணம்

உலு சிலாங்கூர், பிப்ரவரி 24 :

இன்று அதிகாலை புக்கிட் தாகார் சுங்கச்சாவடிக்கு அருகில் உள்ள வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 428ஆவது கிலோமீட்டரில், பல்நோக்கு வாகனம் (MPV) ஒன்று சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்ததில் தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுநர் உடல் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) இயக்குநர் நோரராஸாம் காமிஸ் இதுபற்றிக் கூறுகையில், நள்ளிரவு 1.08 மணிக்கு இந்தச் சம்பவம் தொடர்பாக தங்களுக்கு அவசர அழைப்பு வந்தது என்றார்.

புக்கிட் செந்தோசா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (BBP) ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட ஒரு இயந்திரம் மற்றும் அவசரகால சேவைகள் உதவிப் பிரிவு (EMRS) ஆகியன உடனே சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.

“பல்நோக்கு வாகனம் (MPV) சாலைத் தடுப்பின் மீது சறுக்கி கவிழ்ந்ததும் தீப்பிடித்து எரிந்தது,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தீயை அணைக்கும் பணியை தீயணைப்புப் படையினர் மேற்கொண்டதாகவும் இதன் மதிப்பிடப்பட்ட அழிவு சுமார் 90 சதவிகிதம் என்று நோராஸாம் கூறினார்.

“பாதிக்கப்பட்டவரின் உடல் வெளியே எடுக்கப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

“பாதிக்கப்பட்டவர் ஹாங் பெங் அவுன், 46 என அடையாளம் காணப்பட்டார்,” என்று அவர் கூறினார். மேலும் மீட்பு நடவடிக்கை அதிகாலை 4.15 மணிக்கு முடிந்தது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here