உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த 20 வயதான நவீன் சேகரப்பா இன்று காலை ரஷ்ய ராணுவம் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்துள்ளார். அவர் மரணம் குறித்த புதிய தகவல்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.
கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள கார்கிவ் நகரில் ரஷ்ய ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இவை ஆபத்தான பகுதி என்பதால் இங்கிருக்கும் இந்தியர்கள் உக்ரைனின் மேற்கு எல்லையை நோக்கி நகர வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பாக இந்திய தூதரகம் அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில் உக்ரைன் நேரப்படி இன்று காலை 10.30 மணியளவில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் சேகரப்பா, மளிகை பொருட்களை வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது ரஷ்ய ராணுவம் வெடிகுண்டுகளை வீசி திடீர் தாக்குதலை நடத்தியது. இதில் நவீன் உடல் சிதறி உயிரிழந்துள்ளார்.
தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவதால், நவீனின் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு அவரது நண்பர்களால் செல்ல முடியவில்லை. இந்த நிலையில் நவீன் உயிரிழந்திருப்பதை வெளியுறவு அதிகாரிகள் தற்போது உறுதி செய்துள்ளனர்.
உயிரிழந்துள்ள நவீன் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். அவர் கார்கிவில் உள்ள தேசிய மருத்துவ பல்கலைக் கழகத்தில் 4ஆம் ஆண்டு மருத்துவ படிப்பை படித்து வந்துள்ளார். ரஷ்ய எல்லையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் கார்கிவ் இருப்பதால், அங்கு ரஷ்யாவின் தாக்குதல் மற்ற நகரங்களை விட அதிகமாக உள்ளது. இந்த பகுதியில் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர்.