மூன்று வாகனங்களை உட்படுத்திய விபத்தில், பூஃட் பண்டா உணவு விநியோகிஸ்தர் பலி!- டிரெய்லர் ஓட்டுநர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதி

குவா மூசாங், மார்ச் 7:

ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.6) ஜாலான் குவா மூசாங் – கோலக்கிராயின் 3.5ஆவது கிலோமீட்டரில் மூன்று வாகனங்கள் மோதிய சாலை விபத்தில், போதைப்பொருள்-உட்கொண்டிருந்த ஓட்டுநர் ஓட்டிவந்த டிரெய்லர் கட்டுப்பாட்டை இழந்து, மோட்டார் சைக்கிளில் மோதியதில், பூஃட் பண்டா உணவு விநியோகஸ்தர் ஒருவர் பலியானார்.

நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட உணவு விநியோகிஸ்தரான முகமட் அமீர் நோர்டின், 22, என்பவர் ஆம்புலன்சில் கோலக்கிராய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

குவா மூசாங் மாவட்ட காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் சிக் சூன் ஃபூ கூறுகையில், கோலக்கிராயிலிருந்து குவா மூசாங்கிற்கு சென்று கொண்டிருந்த 36 வயதுடைய ஆடவர் ஓட்டிச் சென்ற ,வால்வோ எஃப்எச்12 டிரெய்லர் கட்டுப்பாட்டை இழந்து எதிர்ப் பாதையில் நுழைந்ததால், இவ்விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

“கட்டுப்பாட்டை இழந்த டிரெய்லர், முகமட் அமீர் ஓட்டிச் சென்ற யமஹா எல்சி135 வகை மோட்டார் சைக்கிளில் மோதி, பின்னர் ஃபோர்டு ரேஞ்சர் வகை வாகனத்துடன் மோதியது.

“43 வயதான ஃபோர்டு ரேஞ்சர் வகை வாகன ஓட்டுநருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன, ஆனால் டிரெய்லர் ஓட்டுநருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை,” என்று அவர் கூறினார்.

டிரெய்லர் ஓட்டுநரின் ஆரம்ப சிறுநீர் பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையில், அவர் மெத்தாம்பேட்டமைனுக்கு சாதகமாக இருப்பதைக் கண்டறிந்ததாகவும், இப்போது மேலதிக விசாரணைக்காக அவர் போலீஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

“இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41 (1) மற்றும் ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 15 (1) இன் படி விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here