கோல திரெங்கானு, மார்ச் 11:
திரெங்கானுவில் சமீபத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கின் காரணமாக, மொத்தம் 113 தொலைத்தொடர்பு கோபுரங்கள் பாதிக்கப்பட்டன என்று மாநில உள்கட்டமைப்பு, பொது வசதிகள், பயன்பாடுகள் மற்றும் பசுமை தொழில்நுட்பக் குழுவின் தலைவர் டாக்டர் மாமட் பூத்தே தெரிவித்துள்ளார்.
இதில் 24 மலேசிய குடும்ப டிஜிட்டல் பொருளாதார மையங்களுக்கும் (Pedi) அடங்கும் என்று கூறினார்.
தற்போது மின்சாரம் முழுமையாக இணைக்கப்பட்ட பின், மீண்டும் அந்த வசதி செயல்படும் வகையில் சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூலம் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
“மாநில மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் (MCMC) அறிக்கையின் அடிப்படையில், கருவிகளை வைத்திருக்கும் தளம் முன்பு உயர்த்தப்பட்டிருந்தாலும், தண்ணீரில் மூழ்கிய இரண்டு கோபுரங்களில் தொலைத்தொடர்பு சாதனங்கள் இருந்தன.
“இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள், குறிப்பாக பாதிக்கப்பட்ட தொலைத்தொடர்பு கோபுரங்களில் உள்ள உபகரண தளத்தின் உயரத்தை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தப்படுகின்றன,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.