மீரி, மார்ச் 11 :
இங்குள்ள கம்போங் பாடாங் கெர்பாவில், நேற்றிரவு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 வயது மூதாட்டி, கைகள் மற்றும் நெற்றியில் தீக்காயத்துடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சம்பவத்தின் போது வீட்டில் இருந்த பாதிக்கப்பட்டவரின் மகனுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
“லோபெங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் குழு இரவு 10.17 மணிக்கு சம்பவம் தொடர்பான அழைப்பைப் பெற்ற பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்றது,” என்று அவர் கூறினார்.
கமாண்டர் ஹம்தானி மடோன் தலைமையிலான தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்தை அடைந்தததும், அங்கு ஒரு நிரந்தர வீட்டில் தீ சுவாலைவிட்டு எரிவதைக் கண்டனர் என்றும் உடனே தீயணைப்புக் கருவியில் இருந்து தண்ணீரைக் கொண்டு தீயை அணைக்கத் தொடங்கினர்.
“தீயை அணைக்க கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் எடுத்தது, நள்ளிரவு 12.52 மணியளவில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.
தீக்காயமடைந்த மூதாட்டி மீரி மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர், துணை மருத்துவர்களால் அவருக்கு ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டதாக பேச்சாளர் கூறினார்.
“தீ விபத்துக்கான காரணம் மற்றும் இழப்பின் மதிப்பு இன்னும் விசாரணையில் உள்ளது.
“அதிர்ஷ்டவசமாக, தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை, ஏனெனில் பாதிக்கப்பட்ட இருவரும் தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர்,” என்று அவர் கூறினார்.