ஷா ஆலாம், மார்ச் 15 :
கடந்த வியாழன் (மார்ச் 10) இங்குள்ள ஜெஞ்ஜாரோமில் உள்ள பண்டார் சௌஜானா புத்ராவில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், 1.95 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள 54.06 கிலோகிராம் மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு தந்தையும் மகனும் கைது செய்யப்பட்டனர்.
49 வயதான தாய்லாந்து நாட்டவரான தந்தையும் மலேசியரான அவரது 26 வயது மகனும் ஜெஞ்ஜாரோமில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை தலைவர், துணை ஆணையர் அஹ்மட் ஜெஃப்ரி அப்துல்லா தெரிவித்தார்.
அவர்களிடமிருந்து சுமார் 10.2 கிலோ எடையுள்ளதும் போதைப்பொருள் இருப்பதாக நம்பப்படுவதுமான 10 சீன தேயிலை பொட்டலங்கள் அடங்கிய, பிரவுண் அட்டைப்பெட்டி ஒன்று கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பின்னர் ஜெஞ்ஜாரோமில் உள்ள பண்டார் சௌஜானா புத்ராவில் உள்ள இரண்டு மாடி கொண்ட வீட்டின் மொட்டை மாடிக்கு போலீசாரை அழைத்துச் சென்றனர், அங்கு 43 சீன தேயிலை பாக்கெட்டுகள் கொண்ட இரண்டு பழுப்பு நிற பெட்டிகளை போலீசார் கண்டுபிடித்தனர், அவற்றில் 43.86 கிலோ எடையுள்ள போதைப்பொருள் இருப்பதாக நம்பப்படுகிறது.
“இந்த போதை மருந்துகள் சிலாங்கூரில் விநியோகிப்பதற்காக, அண்டை நாட்டிலிருந்து பெறப்பட்டதாக நம்பப்படுகிறது,” என்று அவர் இன்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மேலும், அவர்களிடமிருந்து ஒரு காரையும், RM60,400 ரொக்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் விசாரணைக்காக, இருவரும் மார்ச் 17 ஆம் தேதி வரை ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.