5.3 கிலோ போதைப்பொருள் விநியோகம் செய்ததாக, அமலாக்க அதிகாரி மற்றும் மீனவர் மீது குற்றச்சாட்டு!

ஜோகூர் பாரு, மார்ச் 20 :

கடந்த மார்ச் 6 அன்று, 5.3 கிலோ எடையுள்ள போதைப்பொருளை விநியோகித்ததாக அமலாக்க அதிகாரி மற்றும் மீனவர் மீது, ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.

34 வயதான அஹ்மட் ஃபாதில் கசாலி மற்றும் 29 வயதான முகமட் ஃபிர்தாஸ் இஷாக் ஆகியோருக்கு எதிராக நீதிபதி ஆர் சாலினி முன்பு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பிறகு, குற்றச்ச்சாட்டு புரிந்ததற்கு அறிகுறியாக இருவரும் தலையசைத்தனர்.

எனினும், குற்றம் சாட்டப்பட்ட இருவரிடமும் வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் 5,377.32 கிராம் எடையுள்ள சியாபு போதைப்பொருள்களை, மார்ச் 6 ஆம் தேதி இரவு 9 மணியளவில் ஃபாரஸ்ட் சிட்டி, இஸ்கந்தர் புத்திரியில் விநியோகித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்தக் குற்றத்திற்காக, அவர்கள் மீது மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் 15 பிரம்படிகளுக்கு குறையாத பிரம்படிகள் ஆகியவற்றை வழங்க கூடிய, அபாயகரமான மருந்துகள் சட்டம் 1952 (திருத்தம் 1980) பிரிவு 39B (1) (2) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கை அரசு துணை வழக்கறிஞர் நூர் ஐனா சியாகிரா முஹம்மது சியாபிக் சிம் கையாண்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் டத்தோ அபுபக்கர் இசா ரஹ்மத் ஆஜரானார்.

இந்த வழக்கில் இரசாயன அறிக்கையின் முடிவுவை சமர்ப்பிப்பதற்கு, நீதிமன்றம் மே 22 ஆம் தேதியை மறு தேதியாக நிர்ணயித்தது.

ஜோகூர் மற்றும் புத்ராஜெயாவைச் சுற்றியுள்ள தனித்தனி சோதனைகளில், ஒன்பது சட்ட அமலாக்க அதிகாரிகளை காவலில் வைத்ததுடன், மார்ச் 15 அன்று காவல்துறையினரால் முறியடிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் குழுவின் உறுப்பினர்கள் என நம்பப்படுபவர்களில் இவ்விரு குற்றம் சாட்டப்பட்டவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here