ஜோகூர் பாரு, மார்ச் 22 :
நேற்று, இங்குள்ள ஜாலான் பகாவாலி 35, தாமான் ஜோகூர் ஜெயாவில் உள்ள ஒரு வளாகத்தில் 5 ஆவது பட்டாலியனின் பொது நடவடிக்கை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், கிட்டத்தட்ட அரை மில்லியன் மதிப்புள்ள கடத்தல் சிகரெட்டுகள் மற்றும் மதுபானங்கள் கைப்பற்றப்பட்டன.
பட்டாலியன் 5 PGA இன் கட்டளை அதிகாரி, கண்காணிப்பாளர் டிமின் அவாங் கூறுகையில், மாலை 4 மணியளவில் நடந்த சோதனையின் போது, 20 பெட்டிகள் சிகரெட்டுகள், 1,548 மது பாட்டில்கள் மற்றும் சேமிப்பு கிடங்காக பயன்பட்டதாக நம்பப்படும் ஒரு Toyota Hiace சரக்கு வாகனம் என்பன கைப்பற்றப்பட்டன.
மொத்த பறிமுதல்களின் மதிப்பு RM421,769 என்று அவர் கூறினார்.
ஜோகூர் பாருவைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரி விதிக்கப்படாத சிகரெட் மற்றும் மதுபான விநியோக கும்பல்களின் வலையமைப்பை இந்த கைப்பற்றல் காரணமாக முறியடிக்க முடிந்தது என்று அவர் கூறினார்.
“இந்த கடத்தல் கும்பலின் செயல்பாடானது, வாகனத்தை வரியின்றிய சிகரெட் அல்லது மதுபானங்களைச் சேமிக்கும் இடமாக மாற்றுவதுதான். இந்தச் செயல்பாடு சுமார் ஐந்து மாதங்களாகச் செயல்படுவதாகத் தெரிகிறது.
“கைப்பற்றல்கள் அனைத்தும் மேல் நடவடிக்கைக்காக செரி ஆலாம் மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த வழக்கு சுங்கச் சட்டம் 1967 பிரிவு 135 (1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.