ரஷ்யா தாக்குதல்: குழந்தையின் முதுகில் குடும்ப விவரங்கள்.. மனதை கனக்க வைக்கும் உக்ரைன் தாய்மார்களின் பதிவுகள்!

ரஷ்ய தாக்குதலில் கொல்லப்படலாம், அல்லது குழந்தையை பிரிந்துவிடுவோம் என்ற அச்சத்தில் தங்கள் குழந்தைகளின் உடம்பில் குடும்ப விவரத்தை உக்ரைன் தாய்மார்கள் எழுதிவைத்து வருவது மனதை கனக்க செய்துள்ளது.

உக்ரைன் மீது சிறப்பு ராணுவ செயல்பாடு என்ற பெயரில் ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்த 39 நாட்களாக அந்நாட்டின் மீது ரஷ்ய ராணுவம் மூர்க்கதனமான தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் ராணுவமும் ரஷ்ய வீரர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. போர் காரணமாக உக்ரைனிலிருந்து 40 லட்சம் பேர் அண்டை நாடுகளுக்கு வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இர்பின், புச்சா ஆகிய பகுதிகளில் இருந்து ரஷ்ய படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.

இதனை தொடர்ந்து அங்கு உக்ரைன் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சென்றனர். அப்போது பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் தெருக்களில் சிதறிக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். புச்சா நகரிலுள்ள ஒரு தெருவில் 20 ஆண்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன. அவர்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக புச்சா நகர மேயர் தெரிவித்திருந்தார். 300 உடல்களை ஒரே இடத்தில் புதைத்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ரஷ்ய  வீரர்களால் தாங்கள் கொல்லப்படுவோம் என்ற அச்சத்தில், உக்ரைன் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் உடம்பில் அவர்களது பெயர்களையும், குடும்ப உறவினர்களின் போன் நம்பர்களையும் எழுதியுள்ளனர். ரஷ்ய வீரர்களால் தாங்கள் கொல்லப்பட்டு, குழந்தைகள் பிழைத்தால் அவர்களை குடும்பத்தினருடன் சேர்வதற்கு இது உதவும் என்ற எண்ணத்தில் தாய்மார்கள் இதனை செய்துள்ளதாக உக்ரைன் பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த குழந்தைகளின் புகைப்படங்கள் பல பத்திரிகையாளர்களால் ட்வீட் செய்யப்பட்டு வருகின்றன. அவை போரின் கொடூரமான யதார்த்தத்தை எடுத்துக்காட்டும் விதமாக உள்ளன. இதுதொடர்பாக பலராலும் பகிரப்படும் குழந்தையின் புகைப்படத்தில், உக்ரைன் சிறுமியின் பெயரும், தொலைபேசி எண்ணையும் அவரது தாய் எழுதியுள்ளார். இது காண்போரை கண்கலங்க செய்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here