சிரம்பான், ஏப்ரல் 9 :
சிரம்பானில் இருவேறு இடங்களில், இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட ‘ஓப் சாம்செங் ஜலானான்” மூலம், அஜாக்கிரதையாக மோட்டார் சைக்கிள் ஓட்டியது, ஆபத்தான செயல்களில் ஈடுபட்டது மற்றும் போட்டி போட்டுக் கொண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டியது போன்ற குற்றங்களுக்காக ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
நெகிரி செம்பிலான் கன்டிஜென்ட் தலைமையகத்தின் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர், கண்காணிப்பாளர் ஷஃபி முஹமட் இதுபற்றிக் கூறுகையில், இந்த நடவடிக்கை இரவு 11 மணிக்குத் தொடங்கியதுடன் இதில் நெகிரி செம்பிலான் மாநில ஜேஎஸ்பிடி 42 படை மற்றும் சிரம்பான் மற்றும் ஜெம்போல் போக்குவரத்து புலனாய்வு பிரிவு மற்றும் அமலாக்க துறையினரும் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையின் விளைவாக, 16 முதல் 25 வயதுக்குட்பட்ட மொத்தம் ஆறு நபர்கள், அவர்கள் ஓட்டிச் சென்ற 6 மோட்டார் சைக்கிள்களுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
ஜாலான் பெர்சியாரான் சினவாங் 1ல், மோட்டார் சைக்கிளின் முன் சக்கரத்தை தூக்கிக்கொண்டு, வண்டி ஒட்டியதற்காக 18 மற்றும் 25 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.
“இதற்கிடையில், லிகா மாஜூ உணவகத்தை நோக்கிச் செல்லும் BHP மஹ்சானுக்கு அருகிலுள்ள ஜாலான் பாஹாவ்-கெமாயானின் 5 ஆவது கிலோமீட்டரில், ஒருவருக்கொருவர் போட்டியிட்ட 16 முதல் 17 வயதுடைய நான்கு ஆண்களை BSPTD ஜெம்போல் படையினர் கைது செய்தனர்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட அனைத்து நபர்களும் BSPT சிரம்பான் மாவட்ட காவல்துறை தலைமையகம் (IPD) மற்றும் BSPT IPD ஜெம்போல் ஆகியவற்றிக்கு மேலதிக நடவடிக்கைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக ஷாஃபி கூறினார்.
மேலும், அவர்கள் மீது சாலைப் போக்குவரத்துச் சட்டம் (ஏபிஜே) 1987 பிரிவு 42 (1) இன் படி குற்றம் சாட்டப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனையும், RM5,000க்கு குறையாத RM15,000க்கு மிகாமல் அபராதமும், ஐந்து ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவோ அல்லது பெறவோ அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.