பிந்துலு, மே 8 :
ஜாலான் பிந்துலு-மிரியில் நேற்று மாலை 5.55 மணியளவில் ஏற்பட்ட விபத்தில், சாலையைக் கடக்கும்போது பெரோடுவா ஆக்ஸியா கார் மோதியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சரவாக் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் தலைமைக் கண்காணிப்பாளர் பிங்காக் ஜான் கூறுகையில், சம்பவத்தின் போது, பாதிக்கப்பட்டவரான சந்து ஜிராம், 74, சாலையைக் கடக்கும்போது, சாமாலாஜூவிலிருந்து நகர மையத்தை நோக்கி ஒரு நபர் ஓட்டிச் சென்ற கார் அவர் மீது மோதியது.
முதற்கட்ட விசாரணையில், பலியானவர் சாலை பிரிப்பான் அருகே இருந்ததாகவும், திடீரென சாலையைக் கடந்ததால், கார் மோதியதாகவும் அவர் கூறினார்.
அவரது கூற்றுப்படி, 30 வயதான கார் ஓட்டுநருக்கு காயம் ஏற்படாத நிலையில், தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் காரணமாக மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானதாக துணை மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது.
சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் படி வழக்கு விசாரிக்கப்படும் என்றும், இறந்தவரின் உடல் பிந்துலு மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது என்றும் அவர் கூறினார்.









