ஜார்ஜ் டவுன், மே 11 :
பினாங்கு மருத்துவமனையில் (HPP) பகடி வதை செய்து, கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படும் ஐந்து மருத்துவர்களின் பெயர்களை சுகாதார அமைச்சகத்திடம் மேல் நடவடிக்கைக்காக சமர்ப்பித்ததாக, பினாங்கு ஆக்ரோடெக்னாலஜி மற்றும் உணவுப் பாதுகாப்பு, ஊரக வளர்ச்சி மற்றும் சுகாதாரக் குழுவின் தலைவர் டாக்டர் நோர்லேலா அரிஃபின் கூறினார்.
“சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடினின் மேல் நடவடிக்கைக்காக அவர்களின் பெயர்களையும் அவர்களின் துறைகளையும் நான் சமர்ப்பித்துள்ளேன்,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.
எவ்வாறாயினும், ஏப்ரல் 17 அன்று அருகிலுள்ள கட்டிடத்தில் உள்ள அவரது குடியிருப்பு பிரிவில் இருந்து, விழுந்து இறந்த பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் இந்த மருத்துவர்களுக்கும் தொடர்பில்லை என்று நோர்லேலா கூறினார்.
பினாங்கு சுகாதாரத் துறையின் (JKNPP) இயக்குநர் டாக்டர் மரோஃப் சுடின் கூறுகையில், ஏப்ரல் 4 ஆம் தேதி பினாங்கு மருத்துவமனைக்கு (HPP) பணிக்கு வந்திருந்தவர் ஒரு பட்டதாரி மருத்துவ அதிகாரி என்றும், விசாரணையில் அவரது குழு காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்றும் முன்னதாக உறுதிப்படுத்தினார்.
இறந்த பயிற்சி மருத்துவர் பினாங்கு மருத்துவமனையை சேர்ந்தவர் என்பதையும், இந்த வழக்கு திடீர் மரணம் என விசாரிக்கப்பட்டு வருவதாகவும் வடகிழக்கு மாவட்ட காவல்துறைத் தலைமை துணை ஆணையர் சோஃபியன் சாண்டோங் உறுதிப்படுத்தியதாக இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும், விசாரணையில் புதிய ஆதாரங்கள் கிடைத்தால், வழக்கை போலீஸ் மறுவகைப்படுத்தும் என்றும் சோஃபியன் கூறினார்.
பயிற்சி மருத்துவர்களில் 88.5 சதவீதம் பேர் மூன்று முதல் ஐந்து நிலைகளில் மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர் என்று பினாங்கு நுகர்வோர் சங்க (CAP) தலைவர் மொஹிடின் அப்துல் காதர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.