அலோர் காஜா, மே 14 :
ஜாலான் கம்போங் தெங்கா, கோலா சுங்கை பாருவில் நேற்று நடந்த சம்பவத்தில், பதின்ம வயது சிறுமி ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் கார் மீது மோதியதில், மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த அவரது நண்பி உயிரிழந்துள்ளார்.
மாலை 5.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், உயிரிழந்த நூருல் ஷஃபீனா முகமட் ஹஸ்மாவி, தனது நண்பியான நூருல் அத்திகா மூசா ஓட்டிச் சென்ற யமஹா 135எல்சி மோட்டார் சைக்கிள் 77 வயதான ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் ஓட்டிச் சென்ற தோயோத்தா கரோலா கார் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட 15 வயதுடைய இருவரும் கோலா சுங்கை பாருவில் உள்ள செக்கோலா மெனெங்கா கேபாங்சான் ரஹ்மட் பள்ளியின் மாணவிகள் என்றும், அவர்கள் கொண்டாட்டம் ஒன்றிற்காக வெளியே சென்றதாக நம்பப்படுவதாகவும் அலோர் காஜா மாவட்ட காவல்துறை தலைமைக் கண்காணிப்பாளர், அர்ஷத் அபு தெரிவித்தார்.
அவர் கூறியபடி, சிறுமி ஒட்டிய மோட்டார் சைக்கிள் கோலா சுங்கை பாரு டவுனில் இருந்து கோலா லிங்கிக்கு சென்று கொண்டிருந்த போது, கார் மளிகை கடை சந்திப்பில் இருந்து கோலா சுங்கை பாரு டவுன் நோக்கி திரும்பியது.
“திரும்பிக்கொண்டிருந்த காரின் முன்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
“இதன் காரணமாக மோட்டார் சைக்கிள் பயணி, 15 மீட்டர் முன்னோக்கி தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
“மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காலில் காயம் அடைந்தார் என்றும் அவர் தற்போது மலாக்கா மருத்துவமனையின் சிவப்பு மண்டலத்தில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் மேலும் அவரது உடல்நிலை சீராக உள்ளது” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கார் ஓட்டுநருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று அர்ஷாத் கூறினார்.
“சம்பவ இடத்தில் நடந்த விசாரணையில், சாலை நேராகவும், இருவழியாக இருப்பதும், வானிலை நன்றாக இருந்ததும் கண்டறியப்பட்டது. இந்த வழக்கு சாலைப் போக்குவரத்து சட்டம் 1987இன் பிரிவு 41 (1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.