புதிய கோவிட் -19 தொற்றுகளின் எண்ணிக்கை கடந்த வாரம் 119.2% அதிகரித்து 19,137 ஆக இருந்தது. ஒரு வாரத்திற்கு முன்பாக பதிவான தொற்று 8,732 ஆக இருந்தது என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
மே 14 ஆம் தேதியுடன் முடிவடைந்த தனது வாராந்திர புதுப்பிப்பில், நூர் ஹிஷாம் கூறுகையில், ஹரி ராயா பெருநாளை தொடர்ந்து வந்த தொற்றுகளின் அதிகரிப்பு, பொது மருத்துவமனைகள் மற்றும் கோவிட் -19 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பைக் கண்டது.
இந்த பொது சுகாதார வசதிகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 100,000 மக்கள்தொகைக்கு 38% அதிகரித்துள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) படுக்கைகளின் பயன்பாடு 10% குறைந்த அதே சமயம், தீவிர சிகிச்சைப் பிரிவு அல்லாத நோயாளிகளுக்கான படுக்கையில் தங்கும் எண்ணிக்கை 18% அதிகரித்துள்ளது.
நாட்டில் மொத்தம் 4,475,873 கோவிட்-19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. 29,762 செயலில் உள்ள தொற்றுகள் உள்ளன. மீட்புகள் 30,930 இல் இருந்து 12,618 ஆக 59.2% குறைந்துள்ளது. குணமடைந்த நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 4,410,499. இறப்புகளின் எண்ணிக்கை 3.1% உயர்ந்துள்ளது (32 தொற்றுகளில் இருந்து 33 தொற்றுகள்) இறப்புகளின் மொத்த எண்ணிக்கையை 35,612 ஆகக் கொண்டு வருகிறது என்று அவர் கூறினார்.




















