கோத்தா பாரு, மே 31 :
கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 29) பதின்மவயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் வழக்கின் விசாரணைக்கு உதவுவதற்காக, உள்ளூர் லீக் கால்பந்து விளையாட்டு வீரர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட 18 வயது சிறுமி அளித்த புகாரின் பேரில், ஞாயிற்றுக்கிழமை இரவு ஜாலான் பந்தாய் சஹாயா புலானில் (PCB) வைத்து, 28 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கிளாந்தான் காவல்துறையின் செயல்பாட்டு தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹாருன் கூறினார்.
“துணி மற்றும் முக்காடு துணி (tudung) விற்கும் பாதிக்கப்பட்ட பெண், சம்பவம் நடந்த அன்று நண்பகல் 12.30 மணியளவில் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிலிருந்த குப்பைகளை வீசுவதற்கு வெளியே எடுத்துச் சென்றபோது, தனக்கு முன்னரே தெரிந்த சந்தேக நபர் தன்னை ஒரு அறைக்குள் தள்ளி இழுத்துச் சென்றதாகக் கூறினார்.
“கத்திக் கூச்சலிட்ட பாதிக்கப்பட்ட பெண், தான் பலாத்காரம் செய்யப்படுவதற்கு முன்பு சந்தேக நபரை எதிர்த்துப் போராட முயன்றார்,” என்று அவர் கூறினார்.
சந்தேகநபர் நேற்றிலிருந்து நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவியல் சட்டத்தின் 376 ஆவது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்றும் முகமட் ஜாக்கி கூறினார்.