RM118,691 மதிப்புள்ள மதுபானங்கள் கொண்ட டின்களை, உரிமமின்றி வைத்திருந்த மியன்மார் தம்பதியினர் கைது

புக்கிட் மெர்தாஜாம், ஜூன் 9 :

நேற்று இங்கு பிறை தாமான் நாகசாரியில், பினாங்கு கடல்சார் போலீசாரால் Op Kontraban என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இரு சோதனைகளில், அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த மொத்தம் RM118,691 மதிப்புள்ள பல்வேறு வகையான மதுபான டின்கள் கைப்பற்றப்பட்டதுடன் ஒரு மியன்மார் நாட்டுத் தம்பதியினரையும் கைது செய்தனர்.

பினாங்கு மண்டலம் ஒன்று கடல்சார் போலீஸ் கமாண்டர், துணை ஆணையர் ஷம்சோல் காசிம் கூறுகையில், பொதுத் தகவல் மற்றும் உளவுத்துறையின் அடிப்படையில், கடல் நுண்ணறிவுப் பிரிவின் குழுவினர், காலை 11 மணிக்கு சந்தேகத்திற்குரிய இரு வளாகங்களிலும் சோதனை நடத்தினர்.

தாமானில் உள்ள இரண்டு மாடி வீட்டில் நடத்தப்பட்ட முதல் சோதனையில், அவ்வீட்டில் பல்வேறு பிராண்டுகளின் 1,272 மதுபான டின்களைக் கண்டுபிடித்ததுடன், 30 மற்றும் 40 வயதுடைய தம்பதிகளைக் கைது செய்ததாக அவர் கூறினார்.

அதே தாமானில் இருந்த மற்றுமொரு வீட்டினில் நடந்த சோதனையில், பல்வேறு பிராண்டுகள் கொண்ட இன்னுமொரு தொகுதி 3,960 மதுபான டின்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்றார்.

அவரது கூற்றுப்படி, கைப்பற்றப்பட்ட மொத்தம் 5,232 மதுபான கேன்களும் வரிகள் உட்பட RM118,691 மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இத் தம்பதியினர் அனைத்து மதுபானங்களையும் விற்பனை செய்யும் நோக்கத்தில் வைத்திருந்ததாகவும் ஆனால் பொருட்களை சேமிப்பதற்கான உரிமம் அவர்களுக்கு இல்லை என்பதும் ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.

மதுபானங்கள் அனைத்தும் தங்களுடையது என்றும், இரண்டு வீடுகளும் மதுபானக் கடைகளாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் தம்பதியினர் ஒப்புக்கொண்டதாக ஷாம்சோல் கூறினார்.

விசாரணைக்கு உதவும் பொருட்டு, தம்பதியினர் ஐந்து நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், சுங்கச் சட்டம் 1967 மற்றும் கலால் சட்டம் 1976 இன் பிரிவு 135 இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here