குவாந்தான், ஜூன் 12 :
நேற்று பிற்பகல் கம்பாங் அருகேயுள்ள கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலையின் 192.6 ஆவது கிலோமீட்டரில், தங்கள் மகனுடன் நான்கு சக்கர வாகனத்தில் பயணித்தபோது, வாகனம் சறுக்கி பள்ளத்தில் விழுந்ததில், வயதான தம்பதியினர் உயிரிழந்தனர்.
இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அப்துல் தாலிப் ஆகோப், 73, ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி, அவரது மனைவி, ஃபவுசியா மர்சுகி, 62, ஒரு இல்லத்தரசியுமாவார், இருவரும் தாமான் முஹிப்பா, ஜெரான்டுட் என்ற முகவரியை கொண்டுள்ளனர்.
பலியானவர்களின் மகன், அதாவது வாகனத்தின் ஓட்டுநர், முஹமட் தௌபிக், 34, தலையில் பலத்த காயம் அடைந்தார், முன்பக்க பயணி இருக்கையில் இருந்த அவரது மனைவி, நூர் சியாஃபியான அஹ்மட் சோப்ரி, 32, லேசான காயம் அடைந்தார்.
மாநில போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர், கண்காணிப்பாளர் கமாருல் ஜமான் ஜூசோ இதுபற்றிக் கூறுகையில், இந்த சம்பவம் மாலை 5.15 மணியளவில் நடந்ததாகவும், இவ்விபத்தில் Mitsubishi Triton நான்கு சக்கர வாகனம் மட்டுமே சம்பந்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
“குவாந்தான் திசையிலிருந்து ஜெரான்டுட் நோக்கிச் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, இடதுபுறத்தில் உள்ள சாலைத் தடுப்பின் மீது சறுக்கி, பள்ளத்தாக்கில் விழுந்ததாக நம்பப்படுகிறது.
இதனால், வாகனம் அனைத்து பகுதிகளிலும் நசுங்கியது. காயமடைந்த ஓட்டுநர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் மேலதிக சிகிச்சைக்காக தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், ”என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் இவ்விபத்து தொடர்பில் கருத்து தெரிவித்த கமாருல் ஜமான், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியதில், சாலை நேராக இருப்பதும், இரண்டு ஒரு வழி பாதைகள் இருப்பதும் கண்டறியப்பட்டதுடன் அந்த நேரத்தில் கடுமையான மழையுடன் கூடிய காலநிலை நிலவியதாகவும் மற்றும் சாலை ஈரமாக இருந்தது என்றும் கூறினார்.
“இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41 (1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.