கார்ல்ஸ்பெர்க் 175ஆவது பிறந்தநாளை உலகம் முழுவதும் கொண்டாடுகிறது

2022ஆம் ஆண்டு கார்ல்ஸ்பெர்க் மலேசியா பணியாளர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒரு மறக்க முடியாத ஆண்டு. உலகின் முன்னணி புரூவரி நிறுவனங்களுள் ஒன்றான கார்ல்ஸ்பெர்க் உலகம் முழுவதும் அதன் 175ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.

மலேசியாவைப் பொறுத்தவரை 50ஆம் ஆண்டு நிறைவு விழாவை மலேசியர்கள் கொண்டாடுகின்றனர் என்று கார்ல்ஸ்பெர்க் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சீஸ்ட் ஹார்ட் கூறினார்.

இந்தப் பிறந்தநாளும் நிறைவு நாளும் கார்ல்ஸ்பெர்க் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும். டென்மார்க், கோப்பன் ஹேகனுக்கு வெளியே மதுபானத் தயாரிப்பில் கார்ல்ஸ்பெர்க் மலேசியா முதல் நாடு என்ற பெயரையும் பதிவு செய்திருக்கிறது. கார்ல்ஸ்பெர்க் டெனிஷ் பில்ஸ்னர் தயாரிக்கும் முதல் மலேசிய நிறுவனமாகவும் கார்ல்ஸ்பெர்க் மலேசியா விளங்குகிறது.

ஆசியாவில் கார்ல்ஸ்பெர்க் வளர்ச்சிக்கு மலேசியா முக்கியப் பங்காற்றுகிறது. அதன் வளர்ச்சியும் வலிமையும் மக்களைக் கவரும் அதன் தன்மையும் தம்மை வெகுவாகக் கவர்ந்திருப்பதாக ஹார்ட் குறிப்பிட்டார்.

கோவிட்-19 தொற்றுப் பரவல் காலம் மிகப்பெரிய சவாலுக்குரிய ஒரு காலகட்டமாக இருந்தது. அதை மிக நேர்த்தியாகக் கையாண்ட கார்ல்ஸ்பெர்க் மலேசியாவின் அரும்பணி போற்றுதலுக்குரியதாகும். கோவிட்-19 தொற்றுப் பரவல் ஏற்படுத்திய நிலையற்றத்தன்மை, ரஷ்யா – உக்ரெய்ன் போர் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கும் உலகளாவிய பணவீக்கத்தை எதிர்கொள்வதற்கும் கார்ல்ஸ்பெர்க் மலேசியா வெற்றி பெற்றிருக்கிறது.

நம்முடைய வாடிக்கையாளர்கள், பங்காளிகள், பணியாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து இன்று மட்டுமல்ல நாளையும் சிறந்த, உயர்தர பீர் தயாரிப்பில் கார்ல்ஸ்பெர்க் மலேசியா தொடர்ந்து கோலோச்சும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக ஹார்ட் குறிப்பிட்டார்.

மலேசியாவில் நீண்ட காலக் கடப்பாட்டுடன் கார்ல்ஸ்பெர்க் குழுமம் முதலீடு செய்திருக்கிறது. அதன் வளர்ச்சி அந்த நம்பிக்கையைத் தந்திருக்கிறது. கார்ல்ஸ்பெர்க் குழுமம் ஷா ஆலமில் உள்ள மது தயாரிப்பு ஆலையை மேம்படுத்துவதற்கு 110 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கி இருக்கிறது.

கடந்த ஆண்டுகளில் மிகப்பெரிய முதலீட்டைக் கவர்ந்திருக்கும் உள்நாட்டு பீர் தயாரிப்பு நிறுவனமாக மலேசிய கார்ல்ஸ்பெர்க் விளங்குகிறது. கோவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை உத்தரவால் 2020 – 2021ஆம் ஆண்டுகளில் 122 நாட்களுக்கு இதன் செயலாக்கம் முடக்கம் கண்டது.

ஆனால் அதன் வெற்றிக்கு மக்களின் ஆதரவே பிரதானமாக இருந்தது என்பதை கார்ல்ஸ்பெர்க் உணர்ந்து அதனை மனதார அங்கீகரிக்கிறது என்று ஹார்ட் தெரிவித்தார்.

மக்களைப் பாதுகாப்பது, திறன் மேம்பாடுகள் போன்றவற்றில் கார்ல்ஸ்பெர்க் மலேசியா மிகப்பெரிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றிருக்கிறது. தன்னுடைய பணியாளர்கள் அனைவருக்கும் முழு அளவில் தடுப்பூசி போடுவதிலும் அது மிகுந்த சிரத்தையுடன் செயல்பட்டிருக்கிறது என்பதையும் ஹார்ட் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here