இரண்டு மிட்சுபிஷி கார்களை திருடியது தொடர்பில் ஐவர் கைது

கோலாலம்பூர் ஜூன் 22 :

இரண்டு மிட்சுபிஷி கார்கள் திருடப்பட்ட வழக்கில், ஒரு பெண் உட்பட ஐவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜூன் 18 ஆம் தேதி காலை 8 மணியளவில், ஜாலான் பண்டார் பாரு அம்பாங்கில் உள்ள ஒரு பழைய உலோகங்கள் விற்கும் கடையில் நிறுத்தியிருந்த தனது இரண்டு மிட்சுபிஷி கார்களை 54 வயதான வேன் ஓட்டுநர் கண்டுபிடித்ததை அடுத்து, போலீசார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக, அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபாரூக் எஷாக் கூறினார்.

“அடுத்த நாள், அம்பாங் ஜெயா குற்றத்தடுப்பு பிரிவினரின் குழு, அங்கு சோதனை நடத்தியதில் 42 வயதுடைய ஒருவரை நண்பகல் 1 மணியளவில் கைது செய்தது.

அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கோலாலம்பூரில் உள்ள பழைய உலோகங்களை விற்கும் வளாகத்திற்குச் சென்ற போலீசார், திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு மிட்சுபிஷி கேலன்ட் மற்றும் மிட்சுபிஷி ட்ரெடியா கார்கள், ஒரு லோரி மற்றும் திருடப்பட்ட பொருட்கள் என நம்பப்படும் பல பொருட்களைக் கைப்பற்றினர்.

மேலும் ஜின்ஜாங், வாங்சா மாஜூ மற்றும் அம்பாங் ஆகிய இடங்களில் நடந்த சோதனைகளைத் தொடர்ந்து, இதனுடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் 20 முதல் 40 வயதுடைய மேலும் மூன்று ஆண்களையும் ஒரு பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.

“ஆண் சந்தேக நபர்களில் இருவர் போதைப்பொருள் குற்றங்களுக்கான முன்னைய பதிவுகளை வைத்திருப்பது சோதனையில் கண்டறியப்பட்டதுடன், அதே நேரத்தில் அந்தப் பெண்ணும் போதைப்பொருள் தொடர்பான முன்னைய குற்றப்பதிவை கொண்டுள்ளார் என்றார்.

“சந்தேக நபர்கள் பழைய கார்களைத் தேடிச் சென்று, அவற்றை உதிரிப்பாகங்களாக்கி விற்பதற்காக இழுத்துச் செல்வார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

விசாரணைகளுக்கு உதவ சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்த வழக்கு வாகன திருட்டு என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக முகமட் ஃபாரூக் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here