பாதுகாக்கப்பட்ட வன விலங்குகளின் இறைச்சியை சேமித்ததற்காக, மாற்றுத்திறனாளி ஒருவருக்கு RM15,000 அபராதம்

மலாக்கா, ஜூன் 29 :

பாதுகாக்கப்பட்ட வன விலங்குகளின் 78 இறைச்சித் துண்டுகளை சேமித்து வைத்திருந்ததற்காக, மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ஆயிர் கெரோவில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (ஜூன் 29) RM15,000 அபராதம் விதித்தது.

சிறப்பு அனுமதியின்றி போர்னியன் தாடிப்பன்றி, காட்டுப்பன்றி மற்றும் முள்ளம்பன்றி ஆகியவற்றின் இறைச்சி துண்டுகளை பதுக்கி வைத்திருந்ததாக, குற்றஞ்சாட்டப்பட்ட லிம் யூ சிங்கிற்கு (57) நீதிபதி நாரிமான் பத்ருதீன் அபராதம் விதித்தார்.

குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா RM3,000 அபராதம் விதிக்கப்பட்டது, அபராதத்தை செலுத்த தவறினால் ஒரு மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 2010ன் இரண்டாவது அட்டவணையின் கீழ் முழுமையாகப் பாதுகாக்கப்படும் விலங்கான போர்னியன் தாடிப் பன்றியின் இறைச்சியை சிறப்பு அனுமதியின்றி லிம் வைத்திருந்தார்.

ஆயிர் கெரோ-மலாக்கா தெங்கா-ஜாசின் நெடுஞ்சாலையின் (AMJ) பெம்பான்-செர்காம் பகுதிக்கு அருகில், அக்டோபர் 8, 2017 அன்று இரவு 9.30 மணியளவில் அவர் இந்தக் குற்றத்தைச் செய்தார்.

இரண்டாவது குற்றச்சாட்டிற்காக, வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 2010ன் முதல் அட்டவணையின் கீழ் பாதுகாக்கப்படும் விலங்குகளாக உள்ள காட்டுப்பன்றி மற்றும் மலாயன் முள்ளம்பன்றியின் உடற்பாகங்களை அதே தேதி மற்றும் அதே இடத்தில் சேமித்து வைத்திருந்தார்.

அதே சட்டத்தின் பிரிவு 68 (1) (b) இன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக RM100,000 அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

மூன்றாவது முதல் ஐந்தாவது குற்றச்சாட்டுகளில், அக்டோபர் 8, 2010 அன்று இரவு சுமார் 10.45 மணியளவில், தாமான் முஹிப்பா, மெர்லிமாவ் என்ற முகவரியில் மூன்று விலங்குகளின் உடற்பாகங்களை வைத்திருந்ததற்காக லிம் மீது அதே சட்டத்தின் பிரிவு 60 (1) (b) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

மொத்தமாக 5 குற்றச்சாட்டுகளுக்குமான அபராதத்தை லிம் நீதிமன்றத்தில் செலுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here