டுங்குன், ஜூன் 30 :
நேற்று மாலை இங்குள்ள கம்போங் ஆலூர் மாக் பாஹ் அருகே, ஜாலான் தோக் கா-ஜெராங்காவ்வின், கிலோமீட்டர் 1 இல் நடந்த சாலை விபத்தில், செக்கோலா மெனெங்கா கேபாங்சான் பூலாவ் செறையின் முதலாம் படிவ மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
மாலை 6.50 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 13 வயதான நூருல் சாஹிரா அக்ரிமா முகமட் யாசின் என்ற மாணவியே தலை மற்றும் பல கைகால்களில் ஏற்பட்ட காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் கம்போங் அலூர் மக் பாவிலிருந்து கம்போங் மஹ்சூரி தோக் காவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது என்று டுங்குன் மாவட்ட காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் பஹாருடின் அப்துல்லா கூறினார்.
“ஹோண்டா EX5 மோட்டார் சைக்கிளில் பயணித்த பாதிக்கப்பட்டவர், திடீரென சந்திப்பை விட்டு வெளியேறியதாக நம்பப்படுகிறது, இதனால் 41 வயதான உணவக உதவியாளரால் கம்போங் மாக் பாவிலிருந்து பண்டார் டுங்குன் நோக்கி ஓட்டிச் சென்ற தோயோத்தா ஹிலக்ஸ் மாணவியை தவிர்ப்பதற்கு முடியவில்லை என்றும், காரில் மோதிய மோட்டார் சைக்கிள் சிறுது தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அத்தோடு ஹிலக்ஸ் ஓட்டுநருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் பஹாருடின் கூறினார்.
உயிரிழந்தவரின் சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காக டுங்குன் வைத்தியசாலையின் தடயவியல் பிரிவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
“இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41 (1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.