முதலாம் வகுப்பு மாணவர்களை ஏற்றிவந்த வாகனம் விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் மரணம் – 6 மாணவர்களுக்கு லேசான காயம்

சுங்கை பூலோ, ஜூன் 30 :

இங்குள்ள ஜாலான் சௌஜானா உத்தாமாவில், இன்று இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில், செக்கோலா கெபாங்சான் சௌஜானா உத்தாமாவின் 6 முதலாம் வகுப்பு மாணவர்கள் லேசான காயமடைந்தனர், அவர்களை ஏற்றிவந்த வாகன ஓட்டுநர் உயிரிழந்தார்.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) இயக்குனர் நோராஸாம் காமிஸ் கூறுகையில், பிற்பகல் 1.08 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பாக தனது துறைக்கு அவசர அழைப்பு வந்தது.

பெஸ்தாரி ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் மற்றும் சௌஜனா உத்தமா தன்னார்வ தீயணைப்புப் படை ஆகிய நிலையங்களிலிருந்து இரு இயந்திரங்களுடன் 10 பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.

ஆரம்ப அறிக்கைகளின்படி, இந்த விபத்து இரண்டு பல்நோக்கு வாகனங்களான புரோத்தோன் எக்ஸோரா மற்றும் பெரோடுவா அரூஸ் ஆகியவற்றுடன் தொடர்புடையது.

“பெரோடுவா அருஸ் காரை சந்திப்பில் இருந்து வெளியே வந்த இரண்டு பெண்கள் ஓட்டிச் சென்றபோது, ​​இடதுபுறமாக வந்த, 6 முதலாம் வகுப்பு மாணவர்களை ஏற்றிக்கொண்டு ஒருவர் ஓட்டிச் சென்ற புரோத்தோன் எக்ஸோராவுடன் மோதியதில் விபத்து நடந்ததாக சாட்சிகள் தெரிவித்தனர்,” என்று அவர் இன்று தொடர்புகொண்டபோது கூறினார்.

மோதலின் விளைவாக, புரோத்தோன் எக்ஸோரா தலைகீழாக கவிழ்ந்து சாலையின் ஓரத்தில் உருண்டதாக நோராஸாம் கூறினார்.

52 வயதுடைய புரோத்தோன் எக்ஸோராவின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், அதேவேளையில் நான்கு சிறுவர்கள் மற்றும் இரண்டு சிறுமிகள் அடங்கிய ஆறு மாணவர்கள் லேசான காயமடைந்துள்ளனர்.

“அனைத்து மாணவர்களும் சிகிச்சைக்காக சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

பெரோடுவா அரூஸின் ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை, ஆனால் அவர்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் இருந்ததாகவும், அதனால் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் நோராஸாம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here