சிபு, ஜூலை 1 :
சரவாக்கில் கடந்த ஆறு வாரங்களில் மொத்தம் 1,900 கை, கால் மற்றும் வாய் தொற்று நோய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் சிம் குய் ஹியன், இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 1) தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, இந்த ஆறு வார காலத்தில் மொத்தம் 386 கிளஸ்டர்களை உள்ளடக்கியுள்ளது, அவையாவன வீடுகள், பள்ளிகள், பாலர் பள்ளிகள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்கள் அனைத்தையும் உள்ளிட்ட 1,900 வழக்குகள் அடங்குகின்றன.
“கடந்த ஆறு வாரங்களாக, சரவாக்கில் கை, கால் மற்றும் வாய் நோய்த் தொற்று மிக வேகமாக பரவியுள்ளது. கடந்த வாரத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு 900 வழக்குகள் இருந்தன. ஆனால் கடந்த வாரம் மட்டும் 1,000 வழக்குகள் பதிவாயின,” என்று அவர் கூறினார்.
குழந்தைகள் இருக்கும் வீடு, பள்ளி, பாலர் பள்ளி மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்கள் ஆகியவற்றில் நல்ல சுகாதாரத்தை ஏற்படுத்துமாறு டாக்டர் சிம் மக்களை வலியுறுத்தினார்.
“குழந்தைகள் சொறி மற்றும் காய்ச்சலுடன் இருப்பதை நீங்கள் கவனித்தால், தயவுசெய்து அவர்களை அருகிலுள்ள கிளினிக்கிற்கு அழைத்துச் சென்று, இந்த நோய் பரவுவதைத் தடுக்க எங்கள் சுகாதார அதிகாரிகளுக்கு உதவுங்கள்” என்று அவர் மேலும் கூறினார்.