சிபு, ஜூலை 5 :
‘அஞ்சல் அதிகாரி’ மற்றும் ‘போலீஸ் அதிகாரி’ என வேடமணிந்து வந்த மக்காவ் மோசடிக் கும்பலிடம் சிக்கி ஏமாற்றப்பட்ட 59 வயது பெண், RM264,950 இழந்தார்.
சிபு மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் சுல்கிப்ளி சுஹைலி கூறுகையில், புகார்தாரரான ஒரு தனியார் ஓய்வூதியம் பெறும் பெண்மணி , மே 29 நண்பகல் 12.30 மணியளவில் சம்பந்தப்பட்ட அதிகாரியிடமிருந்து (மோசடிக்கு கும்பல்) அழைப்பு வந்ததாகக் கூறினார்.
“கோலாலம்பூரில் உள்ள தபால் நிலையத்திலிருந்து தான் அழைத்ததாக சந்தேக நபர் கூறினார். பின்னர் பாதிக்கப்பட்டவருக்கு பொதி கிடைத்ததாகவும் அதில் போதைப்பொருள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவ்விஷயத்தை போலீசாருக்கு சொல்லாது இருக்க வேண்டுமாயின் பணத்தினை அவர்களுக்கு பரிமாற்றுமாறும் சந்தேக நபர் கூறினார்.
“கைது செய்யப்படுமோ என்ற பயத்தில், பாதிக்கப்பட்டவர் மே 29 முதல் ஜூன் 11 வரை பல்வேறு வங்கிக் கணக்குகளில் 16 பரிவர்த்தனைகளைச் செய்தார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் இச்சம்பவம் தொடர்பில் நேற்று சிபு மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் (IPD) சம்பவம் குறித்து புகார் அளித்தார். இது போன்ற மோசடி அழைப்புகள் வந்தால், மக்களை பதற்றமடைய வேண்டாம் என்றும் உடனே காவல்துறையையோ அல்லது தொடர்புடைய அமைப்புக்களுடன் தொடர்பு கொண்டு, அவற்றினை உறுதிப்படுத்துமாறும் அவர் பொது மக்களைக் கேட்டுக்கொண்டார்.