கெம்பெரா, ஜூலை 8:
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆம்பர் லூக் (வயது 27). இவர் பச்சை குத்துதல் எனப்படும் டாட்டூ மீது மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். அந்த ஆர்வம் காரணமாக ஆம்பர் தனது உடல் முழுவதும் மொத்தம் 600 டாட்டூக்கள் போட்டுள்ளார்.
‘டிராகன் கேல்’ என அழைக்கப்படும் இவர் 16 வயதில் முதல் முறையாக தனது உடலில் டாட்டூ போட்டுள்ளார். அதன்பின்னர், டாட்டூவில் ஏற்பட்ட ஆர்வத்தால் உடல் முழுவதும் 600 டாட்டூக்கள் போட்டுள்ளார்.
இதனிடையே, ஆர்வ மிகுதியில் தனது இரு கண்களிலும் அவர் டாட்டூ போட்டுள்ளார். கண்களை நீள நிறத்தில் (Blue Eyes) மாற்ற வேண்டுமென எண்ணிய ஆம்பர் கண்ணிலும் டாட்டூ போட்டுள்ளார். இதற்காக கண்ணில் நீள நிற மையை ஊற்றியுள்ளார். இதில், அவர் கண்கள் நீள நிறத்தில் மாறியுள்ளது.
இந்நிலையில், தனது கண்களை நீள நிறத்தில் மாற்றுவதற்கான முயற்சியில் கண்பார்வையை இழந்ததாக ஆம்பர் கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆம்பர், கண்களில் மையை ஊற்றியதால் ஏற்பட்ட விளைவாக 3 வாரங்களுக்கு பார்வையை இழந்ததாகவும் பின்னர் மருத்துவ சிகிச்சைக்கு பின் கண்பார்வை பெற்றதாக அவர் கூறினார்.
உடல்முழுவதும் டாட்டூ போட்டது, கண்பார்வையை இழந்தது தொடர்பாக தான் எந்த வருத்தமும் படவில்லை என ஆம்பர் கூறினார். ஆர்வ மிகுதியில் உடல் முழுவதும் டாட்டூ போட்டது மட்டுமின்றி கண்பார்வையையும் கிட்டத்தட்ட இழந்து மீண்ட ஆம்பரின் செயல்கள் அனைவராலும் விநோதமாக பார்க்கப்பட்டு வருகிறது.