கோலாலம்பூர், ஜூலை 9 :
தலைநகரின் செந்தூலில் இந்த ஆண்டு ஐந்து முறை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு கேளிக்கை விற்பனை நிலையத்தில், சமூக சீர்கேடான செயல்கள் மீண்டும் நடைபெறுவது போலீசாரால் கண்டறியப்பட்டது.
நேற்று (ஜூலை 8) மாலை 6.58 மணியளவில், ஜாலான் மெட்ரோ பெர்டானா பாராத்தில் போலீசார் சோதனை நடத்தியதாக செந்தூல்மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் பே எங் லாய் இன்று (ஜூலை 9) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையில் 13 பேர் கைது செய்யப்பட்டனர், அதில் ஒரு உள்ளூர் நபர் அந்த வளாகத்தின் பராமரிப்பாளராக இருந்தார் என்றும் மீதமுள்ளவர்கள் GROக்கள் என்று சந்தேகிக்கப்படுவதாக அவர் கூறினார்.
“சந்தேக நபர்கள் அனைவரும் 23 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள். இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் ஐந்து முறை இந்த வளாகத்தில் சோதனை நடத்தப்பட்டது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
“உள்ளூர் சந்தேக நபருக்கு எதிராக ஏற்கனவே ஐந்து போலீஸ் பதிவுகள் உள்ளதாகவும், கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக விசாரணைக்காக இன்று விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள்,” என்று அவர் கூறினார்.
மேலும் முறையான உரிமம் இல்லாமல் அவ்வளாகம் இயங்கியது, முறையான அனுமதியின்றி வெளிநாட்டு பணியாளர்களை பணியமர்த்தியது மற்றும் பணி அனுமதியை முறைகேடு செய்ததாக வழக்கு விசாரணை நடந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.