ஜார்ஜ்டவுன், ஜூலை 9 :
கெடாவின் பாலிங்கில் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, சுங்கை துவா நீர் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. அதன்காரணமாக மாநிலம் முழுவதும் மொத்தம் 24 இடங்களில் தண்ணீர் விநியோகம் தடைபட்டுள்ளது.
இந்த நீர் விநியோகத்தடை குறித்து பினாங்கு நீர் வழங்கல் கழகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், நேற்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி, பினாங்கு தீவில் 18 இடங்களிலும், செபெராங் பிறை செலாத்தானிலுள்ள ஆறு இடங்களிலும் நீர் விநியோகம் தடைபட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“சுங்கை துவா நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து 100 சதவீத நீர் உற்பத்தித் திறனை முழுமையாக மீட்டெடுத்ததைத் தொடர்ந்து இத்தடை நீங்கும் என்றும், தண்ணீர் விநியோகம் மீண்டும் தொடங்குவதற்கு காத்திருக்கும் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் டயாலிசிஸ் மையங்களுக்கு தண்ணீர் தொட்டி லோரிகள் அல்லது நிலையான தொட்டிகளை வழங்குவதற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம்.
“அது தவிர, பினாங்கு முழுவதும் உள்ள மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களுக்கு RM1 மில்லியன் மதிப்புள்ள குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது, மேலும் தண்ணீர் விநியோகம் மீண்டும் தொடங்குவதற்கு காத்திருக்கும் பகுதிகளுக்கும் இதனுடாக ஆதரவளிக்கப்பட்டது,” என்று அது இன்று தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒரு இடுகையில் தெரிவித்தது .