குடும்பத்தினர் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் தாய் மரணம்- 7 வயது மகன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்

கோத்தா கினாபாலு, ஜூலை 12 :

சபாவின் கிழக்கு கடற்கரையின் குனாக் மாவட்டத்தில் ஒரு குடும்பத்தினர் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில், SUV வாகனத்தின் அடியில் தாயும் அவரது மகனும் சிக்கிக்கொண்டு பல மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதில், ஒரு குழந்தையின் தாய் பரிதாபமாக உயிரிழந்தார், அவரது ஏழு வயது மகன் அதிஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினார்.

நேற்று திங்கள்கிழமை (ஜூலை 11) மாலை 4.45 மணியளவில் ஜாலான் குனாக்-தாவாவில் 10-ஆவது கிலோமீட்டரில் நடந்த இந்த சம்பவத்தில், ​​38 வயதான தாய் மற்றும் அவரது கணவர், 39, மற்றும் அவர்களது 7 வயது மகன், ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் இந்தோனேசிய பிரஜைகள் என்று குனாக் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர், சபாருதீன் ரஹ்மட் தெரிவித்தார்.

மேலும் இந்தக் குடும்பத்தினர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ​​பின்னால் இருந்து SUV வாகனம் அவர்கள் மீது மோதியது.

54 வயதுடைய நபரால் ஓட்டப்பட்ட SUV வாகனம் குனாக் நகருக்குச் சென்றுகொண்டிருந்த மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, இந்த விபத்து ஏற்பட்டதாக அவர் கூறினார்.

இந்த மோதலின் விளைவாக, மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்த கணவன் சாலையோரம் தூக்கி எறியப்பட்டார், ஆனால் பின்னிருக்கையில் சவாரி செய்த தாயும் மகனும் SUV வாகனத்தின் கீழ் சிக்கிக் கொண்டதால், இருவரும் அந்த வாகனத்தால் இழுத்துச் செல்லப்பட்டனர்.

“தந்தையும் மகனும் லேசான காயங்களுக்கு ஆளானார்கள், ஆனால் தாயார் அந்த இடத்திலேயே இறந்துவிட்டார்” மேலும் ​​SUV வாகனத்தின் ஓட்டுநரும் அவரது மனைவியும் காயமின்றி தப்பினர் என்று இன்று (ஜூலை 12) தொடர்பு கொண்டபோது சபாருதீன் கூறினார்.

இரு ஓட்டுநர்களும் குடிபோதையில் இருந்ததாக அதிகாரிகள் சந்தேகிக்கவில்லை, இருப்பினும் பரிசோதனைக்காக இரத்த மாதிரிகளை எடுத்துள்ளனர் என்று அவர் கூறினார்.

“சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41(1) இன் கீழ் நாங்கள் இந்த வழக்கை விசாரித்து வருகிறோம்,” என்று சபாருதீன் மேலும் கூறினார்.a

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here