இஸ்கந்தர் புத்திரி, ஜூலை 12 :
சுல்தான் இப்ராகிம் ஸ்டேடியம் அருகே நேற்றிரவு அவர்கள் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து, விபத்துக்குள்ளானதில் 15 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழந்தனர்.
இஸ்கந்தர் புத்திரி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர், முகமட் கைரி ஜைனுதீன் கூறுகையில், நள்ளிரவு 12.23 மணிக்கு இந்தச் சம்பவம் தொடர்பான அவசர அழைப்பு வந்தது.
அதனைத் தொடர்ந்து, இஸ்கந்தர் புத்தேரி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் இருந்து எட்டு உறுப்பினர்களுடன் ஒரு இயந்திரம் சம்பவ இடத்திற்கு விரைந்தது.
இந்த நடவடிக்கைக்கு மூத்த தீயணைப்பு அதிகாரி II, இஷாக் நோ தலைமை தாங்கினார்.
“சம்பவ இடத்திற்கு வந்ததும், தீயணைப்பு வீரர்கள் காரில் இருந்து தூக்கி எறியப்பட்ட இருவரையும் கண்டனர்.
“பாதிக்கப்பட்ட சிறுமி வாகனத்திற்கு வெளியே தூக்கி வீசப்பட்ட நிலையில் காணப்பட்டார், அவர் அந்தக் காரின் பயணி என்று நம்பப்படுகிறது, அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட ஆண், வாகனத்தின் ஓட்டுநர் எனவும், அவர் காருக்கு அடியில் சிக்கியிருக்க கண்டுபிடிக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.
முதற்கட்ட விசாரணையில், அவர்கள் கேலாங் பாதாவில் இருந்து ஸ்கூடை நோக்கிச் சென்று கொண்டிருந்தது கண்டறியப்பட்டது என்றார்.
“சம்பவத்தின் போது கார் திரும்பி எதிர் பாதையில் நுழைந்ததாக நம்பப்படுகிறது,” என்றும்
இந்த விபத்தில் வேறு வாகனங்கள் சிக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
“இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டதுடன் இருவரது உடல்களும் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன,” என்று அவர் கூறினார்.