இளைஞர்களில் ஒருவர் செனட்டராக நியமிக்கப்படுவார் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்துள்ளார். இஸ்மாயில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருடன் கலந்துரையாடியதாகக் கூறினார். நாட்டின் எதிர்காலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளைய தலைமுறையினரின் கருத்துக்களைப் பெறுவது முக்கியம் என்றும் கூறினார்.
இளைஞர்களின் கருத்துக்களைப் பெற, அவர்களில் இருந்து ஒரு செனட்டர் நியமிக்கப்படுவார் என்பதை நான் இதன் மூலம் அறிவிக்கிறேன் என்று அவர் தேசிய இளைஞர் தின விழாவில் கூறினார். இளைஞர் திட்டங்களுக்காக RM1 மில்லியன் கூடுதலாக ஒதுக்கீடு செய்வதாகவும் பிரதமர் அறிவித்தார். முன்னதாக, மலேசிய இளைஞர் பேரவைக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியதாக அவர் கூறினார்.
15 முதல் 40 வயதிற்குட்பட்டவர்களிடையே வேலையின்மை விகிதம் 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 5.9% உடன் ஒப்பிடும்போது 5.3% ஆகக் குறைந்துள்ளது என்று இஸ்மாயில் கூறினார். அதாவது கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் 627,000 இளைஞர்கள் இருந்ததை ஒப்பிடுகையில் இந்த வருடம் 585,000 இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதாக அவர் கூறினார்.
இளைஞர்களுக்காக மேற்கொள்ளப்படும் பல முன்முயற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வுடன் வேலையின்மை விகிதம் தொடர்ந்து குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக இஸ்மாயில் கூறினார்.