இலங்கையில் இன்று புதிய அதிபர் தேர்தல் : மும்முனை போட்டியால் சூடு பிடிக்கும் வாக்களிப்பு

கொழும்பு, ஜூலை 20 :

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் வெடித்ததை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே பதில் அதிபராக பதவி ஏற்றுள்ளார். புதிய அதிபர் தேர்தல் 20-ந் தேதி (இன்று) நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இத்தேர்தலில், ஆளும் கட்சியான இலங்கை பொதுஜன பெரமுன ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்கேவும், அக்கட்சியை சேர்ந்த டல்லஸ் அழகப்பெருமாவும், ஜனதா விமுக்தி பெரமுனா சார்பில் அனுரா குமார திஸ்சநாயகேவும் போட்டியிடுகின்றனர்.

எதிர்க்கட்சி தலைவரும், சமாகி ஜெய பலவேகயா கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசாவும் போட்டியில் இருந்தார். ஆனால், அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக சஜித் பிரேமதாசா நேற்று திடீரென அறிவித்தார். அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ”நான் நேசிக்கும் நாட்டின், மக்களின் நலன் கருதி போட்டியில் இருந்து விலகுகிறேன்” என்று தெரிவித்திருந்தார். ஆளுங்கட்சி வேட்பாளர் டல்லஸ் அழகப்பெருமா வெற்றி பெற தனது கட்சியும், கூட்டணி கட்சிகளும் கடுமையாக பாடுபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதே சமயத்தில், சஜித் பிரேமதாசா பிரதமர் பதவிக்கு குறி வைத்திருப்பதாக அவரது கட்சியை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். இதுதொடர்பாக ஆளுங்கட்சிக்கும், அவருக்கும் இடையே புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே, டல்லஸ் அழகப்பெருமா, அனுரா குமார திஸ்சநாயகே ஆகிய 3 பேர் களத்தில் உள்ளனர். அவர்களின் வேட்புமனுக்கள் முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டுள்ளன. இந்நிலையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.

இதில், ரணில் விக்ரமசிங்கே வெற்றிபெற வாய்ப்பு அதிகம் இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகளில் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here