28 நாள் காவலில் வைக்க அனுமதிக்கும் சொஸ்மா சட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

கோலாலம்பூர்: பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சொஸ்மா) இன் கீழ் 28 நாட்கள் காவலில் வைக்க அனுமதிக்கும் விதியின் நீட்டிப்பு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடின், கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தின் போது, ​​சொஸ்மா விசாரணைக்கு முந்தைய தடுப்புக் காவலில் வைக்கும் சட்டப்பிரிவை நீடிப்பதற்கான பிரேரணையை மீண்டும் தாக்கல் செய்திருந்தார்.

111 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும், 88  நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்ததையடுத்து, மீதமுள்ள 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்காத நிலையில் அது நிறைவேற்றப்பட்டது.

கடந்த வாரம், ஹம்சா சட்டப்பிரிவை நீட்டிக்கக் கூடாது என்ற சபையின் முந்தைய முடிவைத் திரும்பப் பெறுவதற்கான ஒரு பிரேரணையை முன்வைத்தார். 105 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும், 83 நாடாளுமன்ற உறுப்பினர்கள்  எதிராகவும் வாக்களித்ததையடுத்து, மீதமுள்ள 32  நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்காத நிலையில் அது நிறைவேற்றப்பட்டது.

இது சொஸ்மாவின் துணைப்பிரிவு 4(5) ஐ மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்கான பிரேரணையை மீண்டும் முன்வைக்க அவருக்கு வழி வகுத்தது.

மார்ச் மாதம், ஹம்சா அதே பிரேரணையை சமர்ப்பித்திருந்தார், ஆனால் அது நிறைவேற்றப்படாமல் போனது. 85 நாடாளுமன்ற  உறுப்பினர்கள் ஆதரவாகவும் 86 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். மீதமுள்ள 49 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரை 28 நாட்களுக்கு மேல் விசாரணைக்காக காவலில் வைக்க காவல்துறைக்கு உதவும் சொஸ்மாவின் துணைப் பிரிவு 4(5) ஜூலை 31ஆம் தேதியுடன் காலாவதியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here