சபாவிலுள்ள 608 இடங்கள் வெள்ள அபாயத்தில் உள்ளன – சபா பேரிடர் மேலாண்மைக் குழு

கோத்தா கினாபாலு, ஆகஸ்ட் 30 :

எதிர்வரும் நவம்பர் முதல் அடுத்த மார்ச் வரை பெய்யும் வடகிழக்கு பருவமழை காலத்தில் சபாவில் 608 இடங்களில் வெள்ளப் பேரிடர் அபாயத்தில் இருப்பதாக சபா பேரிடர் மேலாண்மைக் குழு கண்டறிந்துள்ளது.

சபா மாநில அரசு செயலர், டத்தோ சஃபர் உண்டோங் கூறுகையில், முதற்கட்டமாக, வெள்ள பேரிடரை எதிர்கொள்ள பணியாளர்கள் மற்றும் மீட்பு இயந்திரங்கள் உட்பட பல்வேறு அம்சங்களை குழு தயார்படுத்தியுள்ளது.

இந்த மழைக்காலத்திற்காக, பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றுவதற்கும், சாலை வழியாக அணுக கடினமாக உள்ள பகுதிகளில் உதவிகளை வழங்குவதற்கும் வசதியாக 75 ஹெலிகாப்டர் தரையிறங்கும் இடங்களையும் குழு தேர்வு செய்துள்ளது என்றார்.

8,432 அதிகாரிகள் மற்றும் பல்வேறு ஏஜென்சிகளின் உறுப்பினர்களுடன் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாநில அரசு தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.

“மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவர் என்ற முறையில் அனைத்து மாவட்ட அலுவலர்களும் தயாராக இருக்க வேண்டும் என்றும், எந்த நேரத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் செயல்பாட்டு அறையை செயல்படுத்த வேண்டி வரும் என்றும் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நேற்று, மாநிலத்தில் வடகிழக்கு பருவமழைக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க சபா மாநில பேரிடர் மேலாண்மை குழு மூலம் மாநில அரசு கூட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here