மலாக்காவில் கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் உணவு விநியோகிஸ்தர் சம்பவ இடத்திலேயே பலி

அலோர் காஜா, செப்டம்பர் 3 :

இங்குள்ள தஞ்சோங் பிடாரா கடற்கரை நகரமான ஜாலான் பாருவில், உணவு விநியோகிஸ்தர் ஒருவர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் கார் மீது மோதிய விபத்தில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சனிக்கிழமை (செப்டம்பர் 3) நண்பகல் 1 மணியளவில் நடந்த விபத்தில், இங்குள்ள ஃபெல்க்ரா ராமுவான் சீனாவைச் சேர்ந்த முகமட் அலிஃப் பாக்கர் என்ற 28 வயதானவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அலோர் காஜா மாவட்ட காவல்துறை துணைத் தலைவர், அர்ஷத் அபு தெரிவித்தார்.

காரை ஓட்டி வந்த 21 வயது ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார்.

ஓட்டுநர் தஞ்சோங் பிடாராவில் உள்ள தாமான் பிடாரா செத்தியா நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும் அப்போது “மோட்டார் சைக்கிள் சந்தியில் திரும்பிக் கொண்டிருந்த காரின் பக்கவாட்டில் மோதியது,” என்று அர்ஷத் கூறினார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41(1)ன் கீழ் விபத்து குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here