கோத்தா பாரு, செப்டம்பர் 7 :
கிளாந்தான் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு சந்தைகளுக்கு போதைப்பொருட்களை விநியோகிக்கும் ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்ததுடன் RM6.4 மில்லியன் மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
27 முதல் 39 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 29) தனித்தனி இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டதாக கிளாந்தான் மாநில காவல்துறையின் பதில் தலைவர், துணை ஆணையர் டத்தோ முகமட் ஜாக்கி ஹாருன் தெரிவித்தார்.
“பெங்கலான் சேப்பாவில் சாலையோரம் 27 வயது இளைஞன் ஓட்டி வந்த பெரோடுவா விவா வாகனத்தை சோதனை செய்ததில், யாபா மற்றும் எரிமின் 5 மாத்திரைகள் அடங்கிய 17 பார்சல்களை போலீசார் கண்டுபிடித்தனர்.
“அதைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து குபாங் கெரியானில் உள்ள கம்போங் பாசீர் ஜெலடாங்கில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதில் 100 பாக்கெட்டுகள் யாபா மாத்திரைகள் மற்றும் 80 கஞ்சா இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன,” என்று அவர் புதன்கிழமை (செப்டம்பர் 7) இங்குள்ள கிளாந்தான் போலீஸ் தலைமையகத்தில் நடந்த ஊடக சந்திப்பில் கூறினார்.
மேலதிக விசாரணையின் விளைவாக, கோத்தா பாரு மற்றும் ஸ்ரீ கெம்பாங்கான், சிலாங்கூரைச் சுற்றியுள்ள தனித்தனி சோதனைகளில் மேலும் நான்கு சந்தேக நபர்களை போலீசார் கைது செய்ததாக டிசிபி முஹமட் ஜாக்கி கூறினார்.
அக்கும்பலிடமிருந்து மொத்தம் RM6.4 மில்லியன் மதிப்புள்ள 624,000 யாபா மாத்திரைகள், 400 எராமின் 5 மாத்திரைகள் மற்றும் 78,810 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை 703,210 போதைப்பித்தர்கள் பயன்படுத்த முடியும்.
மேலும் அவர்களிடமிருந்த நான்கு கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு கைக்கடிகாரம் மற்றும் ரொக்கத்தின் மொத்த மதிப்பு RM260,344 ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அனைத்து சந்தேக நபர்களும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 11) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர், 1988 ஆம் ஆண்டு ஆபத்தான மருந்துகள் (சொத்து பறிமுதல்) பிரிவு 39B இன் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.