ஜார்ஜ் டவுன், செப்டம்பர் 10 :
இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 10) காலை புக்கிட் ஜம்புலில் மலையேறும் நடவடிக்கையின்போது தவறி விழுந்த பெண் மலையேறுபவர் ஒருவர் தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டார்.
ஜாலான் பேராக் தீயணைப்பு நிலையத் தலைவர், அஸெலன் ஹாசன் கூறுகையில், தனது நண்பர்களுடன் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 30 வயதான பாதிக்கப்பட்ட பெண், கீழே விழுந்து காயம் அடைந்ததாகக் கூறினார்.
தகவல் கிடைத்ததும் “ஒன்பது தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழு, காலை 11.11 மணிக்கு ஒரு அழைப்பைப் பெற்ற பின்னர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது. அவர்கள் சுமார் 25 நிமிடங்கள் கழித்து அந்த இடத்திற்கு வந்தனர்,” என்று அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மீட்புக்குழுவினர் வந்து பார்த்தபோது, பாதிக்கப்பட்ட பெண்ணின் வலது காலில் காயம் ஏற்பட்டிருப்பதைக் கண்டனர்.
ஸ்டெச்சரைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரை மலையிலிருந்து கீழே கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 நிமிடங்கள் எடுத்ததாக அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர் அவசர மருத்துவப் பதில் சேவைகள் (EMRS) பிரிவால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் என்றும் அவர் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார் .