கோலாலம்பூர், செப்டம்பர் 18 :
கெப்போங்கில் உள்ள ஒரு இரவு விடுதியில் போலீசார் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, சமூக சீர்கேடான நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் 16 வெளிநாட்டுப் பெண்களும் ஒரு ஆணும் கைது செய்யப்பட்டனர்.
சனிக்கிழமை (செப்டம்பர் 17) இரவு சுமார் 10.50 மணியளவில், ஜாலான் மெட்ரோ பெர்டானா பாராட், தாமான் உசாஹவான் கெப்போங்கில் உள்ள இரவு விடுதியில், செந்தூல் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து, கோலாலம்பூர் நகர காவல்துறையின் சூதாட்ட எதிர்ப்பு மற்றும் ரகசியச் சங்கங்கள் பிரிவு (டி7) போலீசாரம் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக செந்தூல் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் பெஹ் எங் லாய் கூறினார்.
சோதனையின் போது, அந்த வளாகத்தில் 29 ஆண் மற்றும் இரண்டு பெண் வாடிக்கையாளர்கள் இருந்தனர். “வாடிக்கையாளர்கள் 23 முதல் 57 வயதுக்குட்பட்டவர்கள் என்பது சோதனையில் தெரியவந்தது என்று, இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 18) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளின் மூலம் சமூக சீர்கேடான நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் 16 வெளிநாட்டு பெண்களும் வளாகத்தின் பராமரிப்பாளராக இருந்த உள்ளூர் ஆணும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
“அங்கிருந்த வாடிக்கையாளர்கள் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டனர்,” என்று அவர் கூறினார், அந்த வளாகம் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.
மேலும் அந்த வளாகத்தில் இருந்து சில ஆடியோ கருவிகளையும் போலீசார் கைப்பற்றியதாக அவர் கூறினார்.
இதே போன்ற நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் செந்தூல் போலீஸ் செயல்பாட்டு அறையை 03-4048 2222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்.