ஜோகூர் பாரு, அக்டோபர் 4 :
இங்குள்ள தாமான் இஸ்திமேவாவில், 201 கிலோகிராம் எடையுள்ள கெத்தும் இலைகள் அடங்கிய ஏழு பொட்டலங்களை வைத்திருந்த 19 வயது இளைஞன் போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.
ஜோகூர் பாரு தெற்கு மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ரவூப் செலாமாட் கூறுகையில், நண்பகல் 12.30 மணியளவில் கம்போங் மலாயு மஜிட்டியில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் அந்த வாலிபர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த சோதனையின் போது, 18 வெளிப்படையான பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுடன், ஒன்பது லிட்டர் கெத்தும் நீர் கொண்ட ஒரு பிளாஸ்டிக் பீப்பாய் என்பவற்றை பறிமுதல் செய்ததாக அவர் கூறினார்.
“சம்பந்தப்பட்ட வாலிபர் கைது செய்யாப்பட்டதைத் தொடர்ந்து, தாமான் இஸ்திமேவா பகுதியில் மற்றொரு இடத்தில் சோதனை நடத்தப்பட்டது அங்கு 201 கிலோ எடையுள்ள கெத்தும் இலைகள் கொண்ட ஏழு கருப்பு பிளாஸ்டிக் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன.
“இருப்பினும், இளைஞருக்கு நடத்தப்பட்ட ஆரம்ப சிறுநீர் பரிசோதனையின் முடிவு எதிர்மறையாக இருந்தது. மேலும், அவருக்கு எந்தவிதமான குற்றப் பின்னணியும் இல்லை என்பதும் கண்டறியப்பட்டது,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு RM2,190 என்றும், விசாரணைக்காக அந்த வாலிபர் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார் என்றும் ரவூப் கூறினார்.