கடல் கொள்ளையில் ஈடுபட்ட 20 இராணுவ வீரர்கள் கைது – உள்துறை அமைச்சகம் தகவல்

கோத்தா கினாபாலு, அக்டோபர் 5 :

இரண்டு மாதங்களுக்கு முன்பு செம்போர்னா மாவட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் கடல் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் ஆயுதப்படையைச் சேர்ந்த 20 வீரர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 4) உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலின்படி, இந்த 20 பேரும் கடந்த ஆகஸ்ட் 15 மற்றும் ஆகஸ்ட் 18 அன்று நடந்த இரண்டு சம்பவங்களுக்காக கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

செம்போர்னா, பூலாவ் சியாமின் கடற்பரப்பில் இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது.

செம்போர்னா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ முகமட் ஷாஃபி அப்டால் நாடாளுமன்ற அமர்வின்போது குறித்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் விவரங்களைக் கேட்டதற்கு, பதில் அளிக்கும் வகையில் இந்த எழுத்துப்பூர்வ பதில் அளிக்கப்பட்டது.

இரண்டு வழக்குகளும் குழுக் கொள்ளைக்கான தண்டனைச் சட்டம் பிரிவு 395 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட 20 பேருக்கும் செப்டம்பர் 25 அன்று ஜாமீன் வழங்கப்பட்டது, இருப்பினும் இவ்வழக்கு தொடர்பில் இன்னமும் விசாரணை நடந்து வருகிறது என்றும் அப்பதிலில் கூறப்பட்டுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here