மூவார், அக்டோபர் 12 :
இன்று புதன்கிழமை (அக் 12) போதைப்பொருள் தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளில் இருந்து, உயர் நீதிமன்றம் அவர்களை விடுவித்ததையடுத்து, தொழிலதிபரும் அவரது மீனவர் நண்பரும் மரண தண்டனையில் இருந்து தப்பினர்.
முஹமட் ருசைனி சாமிங்கன் (37) மற்றும் அவரது நண்பர் ரோஸ்ஸைமி ரோஸ்லான் (34) ஆகியோர் போதைப்பொருள் வைத்திருந்ததை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதாக சுட்டிக்காட்டிய நீதிபதி அபுபக்கர் கத்தார், அவ்விருவரையும் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்து தீர்ப்பளித்தார்.
இருப்பினும், மெத்தம்பேட்டமைன் என்று நம்பப்படும் போதை மருந்துகளை உட்கொண்டதற்காக, முகமட் ருசைனிக்கு RM5,000 அபராதம் விதிக்கப்பட்டது. அவர் அந்த அபராதத்தை செலுத்தினார்.
முதல் குற்றச்சாட்டின்படி, ஜனவரி 16, 2018 அன்று, இரவு 7.20 மணிக்கு பத்து பஹாட்டில் உள்ள தஞ்சோங் லபோவில் உள்ள தாலி ஆயிர், சுங்கை கோரிஸில் 3.2 கிலோ மெத்தாம்பேட்டமைன் கடத்தியதாக இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் ஹெரோயின், நிமெட்டாசெபம் உள்ளிட்ட போதைப் பொருட்களை வைத்திருந்ததாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B(1)(a) (கடத்தல்), பிரிவு 15(1)(a) (பயன்படுத்தியது முகமட் ருசைனி மட்டும்) மற்றும் பிரிவு 12(2) (உடைமையில் வைத்திருந்தது ) ஆகியவற்றின் கீழ் அவர்கள் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர்.
விசாரணையின் போது மொத்தம் 15 சாட்சிகள் சாட்சியம் அளித்தனர்.
இந்த வழக்கை துணை அரசு வழக்கறிஞர்கள் ஜாஸ்மி ஹமீசா ஜாபர் மற்றும் லிம் ஜின் ஹாங் ஆகியோர் தொடர்ந்தனர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர் மணியன் கே. மாரப்பன் மற்றும் ஹர்பிரீத் கோர் கில் ஆகியோர் ஆஜராகினர்.