மூன்று பூனைகளை 15வது மாடியில் இருந்து தூக்கி வீசிய நபர் கைது

கோலாலம்பூர், அக்டோபர் 19 :

ஜாலான் PJS 8/9, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் 15வது மாடியில் இருந்து, தனது அண்டை வீட்டுக்காரரது என நம்பப்படும் மூன்று பூனைகளை தூக்கி எறிந்ததாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் நபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபக்ருதீன் அப்துல் ஹமீட் கூறும்போது, திங்கள்கிழமை (அக்டோபர் 17) அளித்த போலீஸ் புகாரின் அடிப்படையில் 44 வயது ஆண் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

கட்டடத்தின் 15வது மாடியில் இருந்து சந்தேக நபர் குறித்த பூனைகளை வீசியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர் வீசியதால், உயிரிழந்த மூன்று பூனைகளின் சடலங்களையும் போலீசார் கண்டுபிடித்தனர் என்று, அவர் இன்று புதன்கிழமை (அக். 19) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் சந்தேகநபர் நேற்று முதல் நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் விலங்குகளைக் கொன்று அல்லது ஊனப்படுத்தியதற்காக குற்றவியல் சட்டத்தின் 428 வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும் முகமட் ஃபக்ருதீன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here