மலாக்கா, அக்டோபர் 29 :
நேற்று, ஆயிர் கேரோ மேல்நிலைப் பாலத்திற்கு அருகில் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் (பிளஸ்) வடக்கு நோக்கி 216வது கிலோமீட்டரில் மூன்று பேர் கொண்ட ஒரு குடும்பத்தை காவு கொண்ட விபத்தில் கைதான லோரி ஓட்டுநருக்கு, இன்று முதல் மூன்று நாட்கள் போலீஸ் விளக்கமறியல் உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நீதிமன்ற துணைப் பதிவாளர் சியாரினா ஷாராணி @ டான், இந்த தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பித்தார்.
நேற்று, காலை 11 மணியளவில் காரும் லோரியும் மோதிய சம்பவத்தில், 28 வயதுடைய ஒரு தம்பதி மற்றும் அவர்களின் ஒரு வயது குழந்தையும் உயிரிழந்தனர்.
சம்பவ இடத்தில் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், லோரி ஓட்டுநர் நெடுஞ்சாலையின் வலது பாதையில் உள்ள சாலைதடுப்புக்கு அருகில் லோரியை நிறுத்தி பழுதுபார்ப்பதற்காக, பாதுகாப்புக் கூம்புகளை வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, முஹமட் நஜிருல் சயாபிக் ஓட்டிச் சென்ற கார், லோரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.