மலேசிய சமூகப் பாதுகாப்புக்கு (பெர்கேசோ) உலகச் சமூகப் பாதுகாப்பு மாநாட்டில் அங்கீகாரம்

மொரோக்கோவில் 2022, அக்டோபர் 23 முதல் 28ஆம் தேதி வரை நடைபெற்ற 2022 உலகச் சமூகப் பாதுகாப்பு மாநாட்டில் (World Social Security Forum – WSSF) சமூகப் பாதுகாப்பில் மலேசியா அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்றது.

அனைத்துலகச் சமூகப் பாதுகாப்புச் சங்கத்தின் (International Social Security Association – ISSA) பேராளர் மாநாட்டில் பெர்கேசோ இந்த உயரிய அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. 161 நாடுகளைச் சேர்ந்த 321 உறுப்பினர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர். சமூகப் பாதுகாப்பு வழங்கும் 2,000 அமைப்புகளும் பங்கேற்றன.

இக்கூட்டத்தில் பெர்கேசோ நிர்வாகத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகம்மட் அஸ்மான் டத்தோ அஸிஸ் முகம்மட் ஐகுகுஅ 17ஆவது தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டார். 2023 தொடங்கி 2025 வரை 3 ஆண்டுகளுக்கு அவர் அத்தலைமைப் பொறுப்பில் இருப்பார்.

ஓர் அனைத்துலக அமைப்பில் மிக உயரிய பதவியில் அமரும் முதல் மலேசியர் என்ற பெருமை அவரையே சாரும். உலகளாவிய அளவில் சமூகப் பாதுகாப்புத் துறையில் மலேசியா அடைந்திருக்கும் வெற்றிக்கு அங்கீகாரமாக இந்த உயரிய பதவி விளங்குகிறது.

“என் மீது அதீத நம்பிக்கை வைத்து ISSA அனைத்துலகச் சங்கத்தின் உறுப்பினர்கள் இந்த அமைப்பின் 17ஆவது தலைவராகத் தேர்வு செய்திருப்பதற்கு நான் நன்றி சொல்கிறேன்.”

“என்னைப் பொறுத்தவரை இந்த வெற்றியானது மலேசியா, மனிதவள அமைச்சு, பெர்கேசோவின் அனைத்து நிலை அதிகாரிகள் – பணியாளர்கள் ஆகியோரின் வெற்றியாகவே பார்க்கிறேன். அனைத்துலகச் சமூகத்தின் பார்வையில் மலேசியாவைத் தூக்கி நிறுத்தியிருப்பதற்கு இவர்களே காரணம்” என்று டத்தோஸ்ரீ டாக்டர் முகம்மட் அஸ்மான் குறிப்பிட்டார்.

ISSA வழி இந்த சங்கத்தின் ஒவ்வோர் உறுப்பினரும் அவரவர் நாட்டில் மக்களின் நலன் பேணுவதற்கு விரிவான, பிரத்தியேகமான சமூகப் பாதுகாப்பை அமல்படுத்துவதற்கு இந்தச் சமூகப் பாதுகாப்பு சிஸ்டத்தை மேம்படுத்தி மிகச்சிறந்த சேவையை வழங்கிடுவதற்கு மிகுந்த கடப்பாட்டுடன் என் பணியைச் செய்வேன் என்று அவர் மேலும் சொன்னார்.

ISSA 1927ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டு சுவிட்சர்லாந்து, ஜெனிவாவை தலைமையகமாகக் கொண்டிருக்கிறது. ஐஎல்ஓ எனப்படும் அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பின் கீழ் சமூகப் பாதுகாப்பு வழங்கும் ஓர் அனைத்துலக அமைப்பாகப் பெயர் பதித்துள்ளது.

 

சமூகப் பாதுகாப்புத்துறையில் கொள்கை, வியூகம், புத்தாக்கம் ஆகியவற்றை விவாதிக்கும் ஓர் உலகளாவிய களமாக ISSA பங்காற்றுகிறது. ISSA முன்னெடுப்பில் உலகச் சமூகப் பாதுகாப்பு மாநாடு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.

இந்த மாநாடு அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், சமூகப் பாதுகாப்பு அமைப்புகளின் நிர்வாகத் தலைவர்கள், உறுப்பு நாடுகளின் சமூகப் பாதுகாப்பில் நிபுணத்துவம் பெற்றவர்கள ஆகியோரை ஒரு களத்தில் ஒன்றுகூட வைக்கிறது. இம்மாநாட்டில் நடப்புப் பிரச்சினைகள், அனுபவப் பகிர்வு, துறைசார்ந்த அறிவாற்றல், சமூகப் பாதுகாப்பின் அவசியம் – நன்மைகள் ஆகியவை விரிவாக விவாதிக்கப்படுகின்றன.
இதற்கு முன்னதாக டத்தோஸ்ரீ டாக்டர் முகம்மட் அஸ்மான் டத்தோ அஸிஸ் முகம்மட் பல்வேறு அனைத்துலக அங்கீகாரங்களைப் பெற்றிருக்கிறார். International Association of Industrial Accident Boards and Commissions (IAIAB) வழங்கிய Frances PERKIN Award 2020 என்ற விருதும் அதில் அடங்கும். அமெரிக்காவைத் தளமாக இந்நிறுவனம் கொண்டிருக்கிறது. இந்த அமைப்பின் இயக்குநர் வாரிய உறுப்பினரான இவர் இவ்விருதைப் பெறும் முதல் ஆசிய தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர ஆசியான் தொழிலாளர் இழப்பீட்டு சங்கத்தின் (Asan Workers Compensation Association – AWCA) தலைவர், ஆசியான் சமூகப் பாதுகாப்பு சங்கத்தின் (Asean Social Security Association – ASSA) இயக்குநர் வாரிய உறுப்பினர்,(Vision Zero Global Alliance) மன்ற உறுப்பினர் பதவிகளையும் இவர் வகித்துள்ளார்.

இந்த மாநாட்டில் மலேசியா பல்முனை அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. அதில் 2025 ஆம் ஆண்டில் ISSA, WSSF 7ஆவது அனைத்துலக மாநாட்டை நடத்துவதற்கு கோலாலம்பூர் தேர்வு செய்யப்பட்டிருப்பதும் அடங்கும்.

இதனை முன்னிட்டு உபசரணை நாடு என்ற முறையில் ISSA உடன் பெர்கேசோ ஒரு புரிந்துணர்வு மகஜரில் கையொப்பமிட்டுள்ளது. 161 நாடுகளைச் சேர்ந்த 2,000 சமூகப் பாதுகாப்பு வழங்குநர்கள், சமூகப் பாதுகாப்பு நிபுணர்கள் இம்மாநாட்டில் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2022, ISSA, WSSF அனைத்துலக மாநாட்டை மொரோக்கோ சமூகப் பாதுகாப்பு அமைப்பு ஏற்பாடு செய்தது. ‘Social Security for Resilient and inclusive Societies’ F என்ற கருப்பொருளில் இம்மாநாடு நடத்தப்பட்டது.

இம்மாநாட்டில் கலந்துகொண்ட டத்தோஸ்ரீ டாக்டர் முகம்மட் அஸ்மான் “மனிதன் – டிஜிட்டல் காலத்தில் ங்மூகப் பாதுகாப்பு நிர்வாகம்” என்ற தலைப்பிலான விவாதத்தின்போது அவரின் பரந்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். தேசிய வேலை வாய்ப்புச் சேவை,MyFutureJobs, Social Synergy ஆகியவற்றின் வழி மனிதத் திறன்களையும் டிஜிட்டல் அம்சங்களையும் இணைத்து தம் கருத்துகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்தார். இவை மக்களின் நலன் பேணும் திட்டங்கள் என்பதையும் அவர் அனுபவப்பூர்வமாகச் சொன்னார்.

பெர்கேசோ, இபிஎஃப் எனப்படும் ஊழியர் சேமநிதி வாரிய உயர் அதிகாரிகள் சமூகப் பாதுகாப்பில் இடம்பெற்றுள்ள சந்தாதாரர்களுக்கு உதவக்கூடிய ஆராய்ச்சிகள், புத்தாக்கம் ஆகியவற்றின் முடிவுகளை இம்மாநாட்டில் பகிர்ந்து கொண்டனர். மிகவும் நேர்த்தியான ரோபோட்டிக் புனர்வாழ்வுத் திட்டத்தை இம்மாநாட்டில் செய்துகாட்டுவதற்கு பெர்கேசோவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது மற்றொரு அங்கீகாரமாகும். மலேசிய சமூக பாதுகாப்பில் எந்த நவீன மேம்பாடு இந்த அளவுக்குப் பயன் அளிக்கிறது என்பது தெளிவுபடுத்தப்பட்டது.

2022-2025 தவணைக்கு ISSA தலைவர் பதவி வழங்கப்பட்டது, மேலும் 2025ஆம் ஆண்டில் 35ஆவது ISSA-WSSF மாநாட்டை நடத்துவதற்கு மலேசியா தேர்வு செய்யப்பட்டிருப்பது மலேசியாவின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குக் கிடைத்திருக்கும் மிக உயரிய அங்கீகாரமாகும்.

பெர்கேசோ மேலும் அதன் சந்தாதாரர்களுக்கு மிகச் சிறந்த, உன்னதமான சேவையை வழங்குவதற்கு இது ஓர் உந்து சக்தி என்றால் மிகையாகாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here