கோலாலம்பூர், நவம்பர் 1:
கோலாலம்பூர்-சிரம்பான் விரைவுச் சாலையின் 2.2 ஆவது கிலோமீட்டரில், டேசா நீர்ப்பூங்கா அருகே நகர மையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, அவர் ஓட்டிச் சென்ற கார் சறுக்கி சாலைத்தடுப்பில் மோதியதில் ஒரு பெண் உயிரிழந்தார்.
இன்று காலை 10.06 மணிக்கு விபத்து குறித்து அவரது தரப்புக்கு தகவல் கிடைத்தது என்று பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் அமிஹிசாம் அப்துல் ஷுகோர் தெரிவித்தார்.
26 வயதுடைய பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற பெரோடுவா கான்சில் கார், அதிகாலை 2 மணியளவில் சுங்கை பீசி டோல் பிளாசாவிலிருந்து நகர மையத்தை நோக்கிப் பயணித்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
“சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தவுடன், கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது பக்கத்தில் சறுக்கி சாலைத்தடுப்பில் மோதியது,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் பெண் ஓட்டுனருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவக் குழுவினர் உறுதி செய்ததாகவும் அமிஹிசாம் தெரிவித்தார்.
“விபத்தால் பாதிக்கப்பட்டவரின் கார் முன் மற்றும் வலது பக்க கதவு நசுக்கியது.
“சம்பவம் தொடர்பாக அந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வது உட்பட, மேலதிக விசாரணைகளை போலீஸ் மேற்கொண்டு வருகிறது.
“இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் (ஏபிஜே) 1987 பிரிவு 41 (1) இன் படி விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.