மலாக்கா, நவம்பர் 1 :
இங்குள்ள குருபோங் தம்போயிலுள்ள போக்குவரத்து சமிக்ஞை சந்திப்பில், அவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் லோரி மீது மோதியதில், அரசாங்க ஓய்வூதியதாரர் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று மதியம் 12.40 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், பலத்த காயங்களுக்கு உள்ளான எஸ்.தேவதாஸ், 68, என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் கிறிஸ்டோபர் பாடிட் கூறுகையில், ஹோண்டா வேவ் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் லோரியை முந்திச் செல்ல முயன்றபோது, இந்த விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது என்றார்.
“முதற்கட்ட விசாரணையில், போக்குவரத்து சமிக்ஞை விளக்கு பச்சை நிறமாக மாறியபோது, இடது பக்கத்திலிருந்து வந்த பாதிக்கப்பட்டவர் சாலையின் வலது பக்கமாக மோட்டார் சைக்கிளை வெட்டியதால் அது லோரியுடன் உரசி விபத்துக்குள்ளானது ,” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41 (1)ன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.
“பாதிக்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிளும் சம்பவ இடத்தில் தீப்பிடித்து எரிந்தது, அது பொதுமக்களால் வெற்றிகரமாக அணைக்கப்பட்டது. பலியானவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மலாக்கா மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது என்று அவர் கூறினார்.