சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான வாட்ஸ்அப் நிறுவனம், நடப்பு ஆண்டின் செப்டம்பரில் 26.85 லட்சம் வாட்ஸ்அப் பயனாளர்களின் கணக்குகளுக்கு தடை விதித்து உள்ளது. தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-ன் கீழ் இந்திய மாதாந்திர அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, 2022-ம் ஆண்டு செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30 ஆகிய தேதிகள் வரையில், 26.85 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த கணக்குகளில் 8.72 லட்சம் கணக்குகளை, பயனாளர்களிடம் இருந்து எந்தவொரு புகாரும் வருவதற்கு முன்பே தடை செய்து விட்டோம். இந்திய வாட்ஸ்அப் கணக்கானது +91 என தொடங்க கூடிய தொலைபேசி எண் வழியே அடையாளம் காணப்படுகிறது என தெரிவித்து உள்ளது. கடந்த ஆகஸ்டில் 23.28 லட்சம் வாட்ஸ்அப் பயனாளர்களின் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது, செப்டம்பரில் தடை விகிதம் 15% அதிகம் ஆகும்.
ஏதேனும் தீங்கு நடந்த பின்னர், அதனை கண்டறிவதற்கு பதில், தீங்கு நடைபெறுவதற்கு முன்பே அதனை தடுத்து நிறுத்துவதற்கு முதல் இடம் கொடுப்பது சிறந்தது என நாங்கள் நம்புகிறோம். அதனால் தடுப்பு நடவடிக்கையில் குறிப்பிடும்படியாக எங்களது கவனம் உள்ளது என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.