கடந்த 2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கோவிட்-19 பெருந்தொற்று சுகாதார ரீதியாக மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
அதில் உலகளவில் பெரும்பாலான நாடுகள் பெரும் சவாலை எதிர்கொண்டன. இதில் மலேசியாவும் பலதரப்பட்ட சவால்களைச் சந்திக்க நேர்ந்தது. குறிப்பாக கோவிட்-19 தொற்றுப் பரவலுக்கு முன்னதாக மலேசியாவில் சராசரி உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியப் பங்காற்றியது சுற்றுலாத்துறைதான்.
2019ஆம் ஆண்டு மலேசியாவுக்கு 26.1 மில்லியன் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் வந்தனர். அவர்கள் இங்கு மொத்தமாக 86 மில்லியன் ரிங்கிட்டிற்கும் மேல் செலவிட்டனர். இதன்வழி சராசரி உள்நாட்டு உற்பத்திக்குச் சுற்றுலாத்துறையானது 13.3 விழுக்காடு வரை முக்கியப் பங்காற்றியது.
அதேசமயம் சுற்றுலாத்துறை சார்ந்த இணைத் துறைகளான பொருள் விற்பனை, போக்குவரத்து, உணவு – பான விற்பனைத் துறைகளிலும் ஏறத்தாழ 3 மில்லியன் பணியாளர்கள் பணியாற்றிவந்தனர். இதன்வழி சுற்றுலாத்துறைக்கு மேலும் 240.5 பில்லியன் ரிங்கிட் நிதியின் மூலம் ஆதரவு வழங்கப்பட்டு உள்நாட்டு சராசரி உற்பத்தி விகிதம் 15.9 விழுக்காடு வரை அடைய முடிந்தது.
நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும் பயன்படுத்தப்படும் வரியின் மூலம் அரசாங்கத்தின் வருவாயை இது அதிகரித்தது. அந்த வரி தொகையானது பள்ளி, சாலை, மருத்துவமனை போன்ற கட்டமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது.
இச்சுழலில் பொருளாதாரத்தை மீட்சி அடையச் செய்வதற்குப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பலதரப்பட்ட நடவடிக்கைகளைத் தெளிவாகத் திட்டமிட்டு மேற்கொண்டு வந்தார்.
இவ்வாண்டு ஏப்ரல் 1ஆம் தேதி அனைத்துலக எல்லைக் கதவுகள் திறக்கப்பட்டது நாட்டின் பொருளாதாரத்தை மீட்சி அடையச் செய்வதற்கு முக்கியப் பங்காற்றியுள்ளது என்றுதான் கூற வேண்டும்.
நாட்டின் பொருளாதார மீட்சிக்கு வலுவான பொருளாதார நிர்வாகம் அவசியமாகின்றது. உலகப் பொருளாதாரத் தரவின்படி இவ்வாண்டு அதன் வளர்ச்சி 2.9 விழுக்காடு பதிவுசெய்யப்பட்டது. 2023, 2024ஆம் ஆண்டுகளில் உலகப் பொருளாதார இலக்கு 3 விழுக்காடு வரையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரு சிறு நாட்டிற்கு உலகப் பொருளாதார மந்த நிலையானது பெரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக வாழ்வாதாரச் செலவின மீட்சி உட்பட முழுவதுமாய் பொருளாதாரத் தேர்வு நடவடிக்கையின் கீழ் மலேசியப் பொருளாதார வளர்ச்சியை இந்த மந்தநிலை தாமதப்படுத்தும்.
எனவே வரப்போகும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள வலுவான அரசியல் சுழல் நாட்டிற்கு அவசியமாகின்றது. மிகவும் தாமதமாக நகரும் பொருளாதார வளர்ச்சியும் அடுத்தாண்டு எதிர்பார்க்கப்படும் பொருளாதார வீக்கமும் நாட்டின் நிலைத்தன்மைக்குப் பாதிப்பினை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
எனவே நிலையான அரசியல் சுழலை ஏற்படுத்தித் தருவதில் தற்போது நாடாளுமன்றக் கலைப்பு அவசியமாகின்றது என வருங்கால வேலைச் சந்தை ஆய்வு மையத்தின் பொருளாதாரப் பிரிவு தலைவர் பேராசிரியர் மடியா டாக்டர் முகமட் யூசோப் சா ரி கருத்துரைத்துள்ளார்.
இந்நிலையில் வேலைச் சந்தையின் தொடர் மீட்சிக்கு 2023 வரவுசெலவுத் திட்டமும் மிகவும் அவசியமாகின்றது. இந்த வரவுசெலவுத் திட்டத்தின் அவசியமானது வேலைச் சந்தையில்12ஆவது மலேசியத் திட்டத்தின் கொள்கைகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிக்கின்றது.
12ஆவது மலேசியத் திட்டத்திற்கு ஏற்ப வேலைச் சந்தை வியூகங்களுக்கு ஆதரவளிக்கும் அம்சமாக 2023 வரவுசெலவுத் திட்டம் அமைந்துந்துள்ளது. உதாரணத்திற்கு இன்னும் அதிகமான மகளிர் தங்கள் வர்த்தக அளவினை மேம்படுத்த 235 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமரின் பொருளாதார – சமூக அக்கறையைத் தெளிவாக வெளிகாட்டுகிறது. கோவிட்-19 தொற்றுப் பரவலுக்கு முன்னதாக இருந்ததைப் போல் வாழ்வாதாரம் நிலையாக உள்ளதை மலேசியர்கள் அடைய விரும்பினால் அரசியல் நிலைத்தன்மை அவசியமாகின்றது.
இந்த அரசியல் நிலைத்தன்மை ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலோங்கச் செய்யும் என்றும் ஆய்வு கூறுகிறது. அரசியல் நிலைத்தன்மை ஒரு விழுக்காடு உயர்வு கண்டால் பொருளாதார வளர்ச்சி 0.25 விழுக்காடு உயரும்.
அதேசமயம் அரசங்கத்தின் செயல்தன்மை ஒரு விழுக்காடு உயர்ந்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 0.61 விழுக்காடு உயரும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.