கோத்தகினபாலு: தெனோம் நாடாளுமன்ற தொகுதியின் வேட்புமனுத் தாக்கல் மையத்திற்கு வெளியே நடந்த கலவரம் தொடர்பாக Parti Kesejahteraan Demokratik Masyarakat (கேடிஎம்) தலைவர் பீட்டர் அந்தோனி நேற்று இரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் விசாரனை முடிந்து இன்று காலை விடுவிக்கப்பட்டதாக சபா போலீஸ் கமிஷனர் இட்ரிஸ் அப்துல்லா தெரிவித்தார்.
கலவரம் செய்ததற்காக தண்டனைச் சட்டம் 147 பிரிவின் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது. நேற்று, பீட்டரின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்ததை அடுத்து, பீட்டரின் ஆதரவாளர்கள் சுமார் 300 பேர் வேட்புமனு மையத்தை முற்றுகையிட முயன்றதாக கூறப்படுகிறது.
சபாவின் முன்னாள் உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சரான பீட்டர், சிஸ்டம் பராமரிப்பு ஒப்பந்தப் பணிக்காக யுனிவர்சிட்டி மலேசியா சபா (UMS) துணை வேந்தரின் அலுவலக கடிதத்தை தவறாக பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்றும் RM50,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
தேர்தல் ஆணைய இணையதளத்தின்படி ஒரு குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டு, ஓராண்டுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மற்றும் RM2,000 க்கு மேல் அபராதம் விதிக்கப்பட்ட நபர்கள் சட்ட மன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட தகுதியற்றவர்கள் ஆவர்.