மேடையிலேயே கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட பிரதமர் ; ம.இ.கா. பணிப்படை நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி

எனது தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் நாட்டின் முன்னேற்றப் பாதையில் இந்திய சமூகம் ஒருபோதும் ஒதுக்கப்படமாட்டாது என பல ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் உறுதியளித்திருந்தார்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் புக்கிட் ஜாலிலில் ம.இ.கா. ஏற்பாட்டில் தேசிய அளவிலான பணிப்படை அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர், தேசிய முன்னணித் தலைவர் டத்தோஸ்ரீ அமாட் ஸாஹிட் ஹமிடி உள்ளிட்டோர் சிறப்புப் பிரமுகர்களாகக் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், ஏழ்மை நிலை ஒழிப்பு, சமூக மேம்பாட்டிற்காக மித்ரா வழி 100 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது (2023 பட்ஜெட்டு முன்). அதேபோல் தொழில் முனைவோர்- தொழில் மேம்பாடு, இந்திய சமூக நலக் கல்வி – சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கும் 100 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர இந்திய சமூகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் வாயிலாகவும் 25 மில்லியன் ரிங்கிட் நிதி வழங்கப் பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் இந்த விழாவில் முன்னதாகப் பேசிய ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன், ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் இயங்கிவரும் மித்ரா மீண்டும் பிரதமர் துறைக்கு மாற்ற வேண்டும். அதோடு, இளையோர் உருமாற்றத் திட்டத்திற்கு 2 மில்லியன் ரிங்கிட் நிதி வழங்க வேண்டும்.

மித்ராவுக்கான மானியங்களை நிர்வகிக்க அறவாரியம் அமைக்கவேண்டும். மெட்ரிகுலேஷன் கல்வி மையமாகச் செயல்பட டேஃப் கல்லூரிக்கு வாய்ப்பு வழங்கப்படவேண்டும். சொஸ்மா சட்டத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

தொடர்ந்து பேசிய ஸாஹிட் ஹமிடியும் அரசாங்க – தனியார் துறைகளில் இந்தியர்களுக்கான வேலை வாய்ப்பினை அதிகப்படுத்த வேண்டும்.

அதோடு மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்திலும் இந்திய மாணவர்களுக்கு அரசாங்கம் அதிகமான இடங்களை வழங்க வேண்டும். மேலும், விக்னேஸ்வரன் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளது போல் மெட்ரிகுலேஷன் கல்வி மையமாக டேஃப் கல்லூரி செயல்படுத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும். இது தவிர ஒரு சிறப்புத் திட்டத்தின் வாயிலாக இந்திய சமூகத்தினர் மத்தியில் நகர்ப்புற ஏழ்மை விகிதத்தைக் குறைக்க அரசாங்கம் முனைப்புக் காட்ட வேண்டும்.

இதற்கிடையே, இந்தியர்களின் மத்தியில் குற்றச் செயல்களைக் குறைப்பதற்கு துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும், இந்திய சமுதாயத்தின் உருமாற்றத்திற்கு சிறப்பு சிறு கடனுதவி (மைக்ரோ கடன்) விரிவாக்கம் செய்யப் படவேண்டும். அதே சமயம் வீடுகள் வாங்குவதற்கான கடனுதவிகளும் இந்திய சமுதாயத்திற்கு எளிதாக்கித் தரப்பட வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்ததோடு வரும் பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால் பிரதமராகும் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையும் தமக்கு உள்ளதாக ஸாஹிட் கூறினார்.

முன்னதாக விக்னேஸ்வரனின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த பிரதமர் சில கோரிக்கைகள் குறித்து இந்திய சமூக மேம்பாட்டிற்கான சிறப்புக் கூட்டத்தில் கலந்துரையாடி முடிவெடுப்போம் என்றார் அவர்.

ஆனால், மித்ரா அறவாரியம் தோற்றுவிப்புக்கும் மித்ரா அமைப்பை மீண்டும் பிரதமர் துறையின் கீழ் இணைத்துக் கொள்ளப்படுவதற்கும் பிரதமர் அந்த மேடையிலேயே உறுதியளித்தார்.

இது தவிர வறிய நிலையில் உள்ள இந்திய மாணவர்களின் கல்விக்காக 2 மில்லியன் நிதி வழங்கவும் பிரதமர் அந்த மேடையிலேயே ஒப்புதல் அளித்தார்.
பிரதமரின் இந்த அறிவிப்புக்கு அரங்கம் நிறைந்த கரவொலி எழுந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here