தேசிய முன்னணி வெற்றி பெற்றால் அனைத்து பள்ளிகளிலும் தமிழ், சீன மொழி பாடங்கள் போதிக்கப்படும்

இம்மாதம் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் 15ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால், நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழ், சீனம், இபான், கடாசான், டுசுன் உட்பட இதர மொழிகளும் பாடங்களாகப் போதிக்கப்படும் என தேசிய முன்னணி தனது கொள்கை அறிக்கையில் கூறியுள்ளது.

தற்போது அனைத்து பள்ளிகளிலும் தேசிய மொழி, ஆங்கில மொழி பாடங்கள் போதிக்கப்பட்டு வருகின்றன. வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால், தேசிய முன்னணி அரசாங்கத்தின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் மேற்குறிப்பிட்ட பாடங்கள் போதிக்கப்படும் என தேசிய முன்னணியின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் கூறினார்.

பல இன மக்கள் வாழும் இந்நாட்டில் இன ஒற்றுமையை மேலும் வலுவாக்க அனைத்து மக்களும் பல்வேறு மொழிகளைக் கற்றிருப்பது அவசியம் எனவும் அவர் சொன்னார்.

இது மாணவர்கள் பல மொழிகளில் பேசும் ஆற்றலைக் கொண்டிருக்கும் அதேவேளையில், அனைத்து மாணவர்களும் சகோதரத்துவ முறையில் ஒற்றுமைமிகுந்த மக்களாக உருவாக முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பி40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச உயர்க்கல்வி வழங்கும் அதேவேளையில், அவர்ளுக்கு இலவச மடிக்கணினியும் வழங்கப்படும் என்ற அவர், அவர்கள் படிக்கும் பள்ளிகளில் 5ஜி வேகம் கொண்ட இணைய வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றார்.

அதேவேளையில், வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால் நாட்டிலுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் அவர்களின் பிறந்தநாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here